2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது லெய்ப்ஸிக்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், கடந்த பருவகாலத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுன் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரர் பற்றிக் ஸ்சிச் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றதுடன், ஆர்.பி லெய்ஸிக்கின் மத்தியகளவீரர் அஞ்சலினோ கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய உதையை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் அணித்தலைவரும், கோல் காப்பாளருமான ஹியூகோ லோரிஸ் கோல் கம்பத்துக்கு தட்டி விட்டிருந்ததுடன், பின்னர் ஆர்.பி லெய்ப்ஸிக்கின் இன்னொரு முன்களவீரரான திமோ வேர்னரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையையும் தடுத்திருந்தார்.

பின்னர், பற்றிக் ஸிச் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்தானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றதுடன், திமோ வேர்னரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை ஹியூகோ லோரிஸ் மீண்டும் தடுத்திருந்தார்.

இந்நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மத்தியகளவீரர் ஸ்டீவன் பெர்க்லைலின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை ஆர்.பி லெய்ஸிக்கின் கோல்காப்பாளர் பீற்றர் குலாஸி சிறப்பாகத் தடுத்திருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரர் கொன்ரட் லைமரை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்களவீரர் பென் டேவிஸ் விதிமுறைகளை மீறி கையாண்டமைக்காக வழங்கப்பட்ட பெனால்டியை திமோ வேர்னர் கோலாக்கியதோடு ஆர்.பி லெய்ப்ஸிக் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா வென்றிருந்தது. அத்லாண்டா சார்பாக, ஹன்ஸ் ஹடெபொயர் இரண்டு கோல்களையும், ஜொஸிப் இலிசிச், றெமோ ஃபிறீயுலர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை டெனிஸ் செர்சேவ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று  அதிகாலையில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .