2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பயிற்றுநராக ஷாஸ்திரி; ட்ராவிட், சகீரும் அழைப்பு

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக, முன்னாள் தலைவரான ரவி ஷாஸ்திரி அறிவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை, அவருக்கான பதவி வழங்கப்பட்டுள்ளது.

தவிர, குறித்த காலத்துக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, சகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, அக்காலப்பகுதியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கான துடுப்பாட்டப் பயிற்றுநராக, முன்னாள் தலைவரும் 19 வயதுக்குட்பட்ட அணி, ஏ அணி ஆகியவற்றின் பயிற்றுநருமான ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே, பயிற்றுநர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கான புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, நேற்று முன்தினம் இடம்பெற்றது. கிரிக்கெட் ஆலோசனைக் செயற்குழுவின் உறுப்பினர்களான சச்சின் டென்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ். லக்‌ஷ்மன் ஆகியோர், பயிற்றுநர் பதவிக்கானவர்களை நேர்கண்டனர்.

இதில் ரவி ஷாஸ்திரி, டொம் மூடி, விரேந்தர் செவாக், றிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் நேர்காணப்பட்டனர்.

முன்னைய பயிற்றுநரான கும்ப்ளே, அணித்தலைவர் கோலியுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே பதவி விலகியிருந்த நிலையில், கோலியுடன் நெருக்கத்தைக் கொண்டுள்ள ரவி ஷாஸ்திரி, தற்போது புதிய பதவியைப் பெற்றுள்ளார்.

பயிற்றுநராக கும்ப்ளே இருக்கும் போதே, புதிய பயிற்றுநருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, ரவி ஷாஸ்திரி, அப்போது விண்ணப்பித்திருக்கவில்லை. அப்பதவி, கும்ப்ளேவுக்குத் திரும்பவும் கிடைக்குமென அவர் எதிர்பார்த்தமையே அதற்கான காரணமாகும். இவற்றுக்கு நடுவில், தனது பதவியிலிருந்து விலகுவதாக கும்ப்ளே அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய பயிற்றுநருக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது, மேலும் நீடிக்கப்பட்டது. அப்போதே, ஷாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .