2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இனியஸ்டா

Editorial   / 2018 மே 21 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவரும் மத்தியகள வீரருமான அன்ட்ரேஸ் இனியஸ்டா, வெற்றியுடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெற்றார்.

பார்சிலோனாவின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற றியல் சொஸைடட் அணியுடனான போட்டியில், பிலிப் கோச்சினியோ பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றமையையடுத்தே பார்சிலோனாவிலிருந்து வெற்றியுடன் 34 வயதான அன்ட்ரேஸ் இனியஸ்டா விடைபெற முடிந்தது.

இந்நிலையில், குறித்த போட்டி முடிவடைந்தவுடன் லா லிகாவில் ஏற்கெனவே சம்பியனான பார்சிலோனாவுக்கு லா லிகா சம்பியன் கிண்ணம் வழங்கப்பட்ட நிலையில், அதை பார்சிலோனா அணியின் தலைவரான அன்ட்ரேஸ் இனியஸ்டா பெற்றுக் கொண்டார்.

தனது 12ஆவது வயதில் பார்சிலோனாவின் இளைஞர் கட்டமைப்பில் இணைந்துகொண்ட அன்ட்ரேஸ் இனியஸ்டா, 22 ஆண்டுகளில் 674 போட்டிகளில் பார்சிலோனாவுக்காக விளையாடியிருந்தார். அன்ட்ரேஸ் இனியஸ்டாவின் முன்னாள் சக மத்தியகள வீரரான ஸ்கெவி மட்டுமே அன்ட்ரேஸ் இனியஸ்டாவை விட அதிக போட்டிகளாக 767 போட்டிகளில் பார்சிலோனாவுக்காக விளையாடியிருந்தார்.

16 ஆண்டுகளாக பார்சிலோனா சிரேஷ்ட அணிக்காக விளையாடியிருந்த அன்ட்ரேஸ் இனியஸ்டா, ஒன்பது லா லிகா பட்டங்களையும் நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் மூன்று கழக உலகக் கிண்ண கிண்ணங்களையும் ஆறு கோப்பா டெல் ரே கிண்ணங்களையும் வென்றிருந்தார்.

இதேவேளை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்கள வீரரான பெர்ணான்டோ டொரஸ், அவ்வணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்தார். தமது மைதானத்தில் ஐபார் அணியுடன் நேற்று முன்தினம் அத்லெட்டிகோ மட்ரிட் மோதிய போட்டியே 34 வயதான பெர்ணான்டோ டொரஸ் அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக விளையாடிய இறுதிப் போட்டியாக அமைந்த நிலையில் பெர்ணான்டோ டொரஸ் பெற்ற இரண்டு கோல்களோடு 2-2 என்ற கோல் கணக்கில் இப்போட்டியை சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்துக் கொண்டது.

கனிஷ்ட வீரராக 1995ஆம் ஆண்டு அத்லெட்டிகோ மட்ரிட்டில் இணைந்த பெர்ணான்டோ டொரஸ், 2007ஆம் ஆண்டு வரை அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக விளையாடியதுடன் பின்னர் லிவர்பூல், செல்சி, ஏ.சி மிலன் ஆகிய அணிகளை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மீண்டும் அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குத் திரும்பிய பெர்ணான்டோ டொரஸ், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக 404 போட்டிகளில் விளையாடி 129 கோல்களைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .