2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மக்கியூரியை கைச்சாத்திட்ட மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ஹரி மக்கியூரியை, பின்களவீரரொருவருக்கான உலக சாதனைத் தொகையொன்றாக 80 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கைச்சாத்திட்டுள்ளது.

ஒரு மேலதிக ஆண்டு தெரிவைக் கொண்ட ஆறாண்டு ஒப்பந்தமொன்றுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டுடன் 26 வயதான ஹரி மக்கியூரி இணங்கியுள்ளார்.

இதுவரையில் கடந்தாண்டு ஜனவரியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செளதாம்டனின் பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக்கை 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு பிறிதொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் கைச்சாத்திட்டமையே பின்களவீரரொருவருக்கான அதிக தொகையாகக் காணப்பட்டிருந்தது.

இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் பின்களவீரரான ஹரி மக்கியூரில் நீண்ட காலமாக ஆர்வத்தைக் கொண்டிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், ஓராண்டுக்கு முன்னர் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக 70 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களைச் செலுத்த வேண்டியிருந்தநிலையில் அது அதிகமென உணர்ந்து அவரைக் கைச்சாத்திடுவதிலிருந்து அப்போது பின்வாங்கியிருந்தது.

இங்கிலாந்து சம்பியன்ஷிப் கழகமான ஹல் சிற்றியிடமிருந்து லெய்செஸ்டர் சிற்றியில் 2017ஆம் ஆண்டு இணைந்த ஹரி மக்கியூரி, லெய்செஸ்டர் சிற்றிக்காக இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் 69 போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்களையும் பெற்றிருந்தார்.

தனது விளையாடும் காலத்தை இன்னொரு இங்கிலாந்து சம்பியன்ஷிப் கழகமான ஷெஃபீல்ட் யுனைட்டெட்டில் ஆரம்பித்த ஹரி மக்கியூரி அங்கு 134 போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல்களைப் பெற்றிருந்த நிலையில் 2014ஆம் ஆண்டு ஹல் சிற்றியில் இணைந்து 2017ஆம் ஆண்டு வரை 54 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு கடனடிப்படையில் விகன் அத்லெட்டிக் சம்பியன்ஷிப் கழகத்துக்குச் சென்றிருந்த ஹரி மக்கியூரி 16 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .