2024 மே 14, செவ்வாய்க்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது செல்சி

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், மன்செஸ்டர் யுனைட்டெட்டை, நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி வென்றுள்ளது.

 

இப்போட்டியின் முதலாவது பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியில், சீஸர் அத்பிலிகுவாட்டாவிடமிருந்து பெற்ற பந்தை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர்களின் கவனிப்புகளிலிருந்து விடுபட்டு, கோல் காப்பாளர் டேவிட் டி கியாவைத் தாண்டி, போட்டியின் 55ஆவது நிமிடத்தில் அல்வரோ மொராட்டா பெற்ற கோலின் மூலமாக 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் செல்சி வெற்றிபெற்றது.

குறித்த கோல் பெறப்பட்ட பின்னர் அழுத்தத்தை மன்செஸ்டர் யுனைட்டெட் அதிகரித்த்து, மார்க்கஸ் றஷ்போர்ட் இரண்டு தடவைகள் கோல் பெறும் நெருங்கிய சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்தபோதும் கோல் பெற முடியவில்லை என்பதோடு, மாற்று வீரராகக் களமிறங்கிய மெளரான ஷெலைனியின் உதையை, செல்சியின் கோல் காப்பாளர் சிபோ கோத்துவா தடுத்திருந்தார்.

இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் செல்சியின் முகாமையாளரான அன்டோனியோ கொன்டேயும் யுனைட்டட்டின் முகாமையாளரான ஜொஸே மொரின்யோவும் கைகுலுக்குகியிருந்தபோதும் போட்டி முடிந்த பின்னர் கைகுலுக்கியிருக்கவில்லை. கொன்டே குறித்த விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், குறித்த போட்டியில் பெறப்பட்ட வெற்றி, அவற்றுக்கான பதில்களுக்கு உதவுமென்ற நிலையில், போட்டியின் முடிவில் இந்த வெற்றியை கொன்டே கொண்டாடியிருந்தார்.

இதேவேளை,  இடம்பெற்ற இன்னொரு போட்டியில், ஆர்சனலை மன்செஸ்டர் சிற்றி வென்று, இப்பருவகால பிறீமியர் லீக்கில் தமது ஒன்பதாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்து கொண்டது. பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் ஒன்பதாவது தொடர்ச்சியான வெற்றியைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

பெர்னான்டின்ஹோவுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த கெவின் டி ப்ரூனே, போட்டியின் 19ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் சிற்றி வெற்றிபெற்றது. பின்னர் போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை சேர்ஜியோ அகுரோ கோலாக்க, சிற்றி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, ஆர்சனலின் மாற்று வீரராகக் களமிறங்கிய அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றபோதும் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜெஸூஸ் பெற்ற கோலின் மூலம் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சிற்றி வென்றது.

சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங்கை விதிமுறைகளை மீறி நாச்சோ மொன்றியல் சவாலுக்குட்படுத்தியிருந்தார் என பெனால்டி வழங்கப்பட்டதற்கும் ஜெஸூஸ் கோல் பெறும்போது ஜெஸும் டேவிட் சில்வாவும் ஓப் சைட்டில் இருந்தனர் என ஆர்சனல் வாதிட்டிருந்தது.

இந்நிலையில்,  இடம்பெற்ற இன்னொரு போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், கிறிஸ்டல் பலஸை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. இப்போட்டியில் டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சொன் ஹியுங் மின் பெற்றிருந்தார்.

இப்போட்டிகளின் முடிவில், 31 புள்ளிகளைப் பெற்றுள்ள சிற்றி, இரண்டாமிடத்திலுள்ள யுனைட்டெட், செல்சியிடம் தோல்வியடைந்ததன் காரணமாக, பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில், யுனைட்டெட்டுக்கும் தமக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை எட்டாக அதிகரித்துக் கொண்டுள்ளது. யுனைட்டெட்டும் டொட்டென்ஹாமும் 23 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் கோல் எண்ணிக்கை அடிப்படையில், முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருந்க்கின்றன. இவற்றை விட ஒரு புள்ளி குறைவாக 22 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி, பட்டியலில் நான்காமிடத்திலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .