2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலிங்கவுக்கு மஹேல ஆதரவு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள தடையை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கண்டித்துள்ளார்.  

இலங்கை அணியின் வீரர்களின் உடற்றகுதி தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விமர்சனத்துக்கு, மறைமுகமாகப் பதிலளித்திருந்த லசித் மலிங்க, கிளியின் கூடு பற்றி, குரங்குக்கு என்ன தெரியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.  

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தனது ஒப்பந்தத்துக்கு முரணாக, மலிங்க நடந்துகொண்ட 2ஆவது தடவை இதுவெனத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, அது தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்தது.  

விசாரணைக் குழு முன் ஆஜராகிய மலிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதோடு, உத்தியோகபூர்வமான மன்னிப்பைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஒரு வருடத் தடை, அவருக்கு விதிக்கப்பட்டது. அத்தோடு, அவரது அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.  

இந்நிலையில், டுவிட்டர் இணையத் தளத்தில், மஹேலவிடம் கருத்தொன்றை முன்வைத்த இரசிகரொருவர், “வீரர்களைக் கேலியாகப் பேசுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுமதியுண்டு. ஆனால், வீரர் கருத்துத் தெரிவித்தால், அவருக்கு 6 மாதத் தடை (குறிப்பு: இரசிகரின் கருத்தில், தண்டனை பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டது) விதிக்கப்படுமா? இலங்கை கிரிக்கெட் சபை, அதன் மோசமான நிலையில்” என்று கூறியிருந்தார். அவரது கருத்தை ஆமோதித்த மஹேல, “இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.  
அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சரின் நடத்தையை விமர்சித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரரின் வெளியான கேலிச் சித்திரத்தையும், மஹேல மீளப் பகிர்ந்திருந்தார்.  

தான் விளையாடும் காலத்திலேயே, இலங்கை கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த மஹேல, ஓய்வுபெற்ற பின்னரும், அந்த விமர்சனங்களைத் தொடர்கிறார்.

இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித மலிங்க விளையாடியிருந்த நிலையில், அவ்வணியின் பயிற்றுநராக, மஹேல ஜெயவர்தன செயற்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .