2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனானார் அஷ்லெய் பார்ட்டி

Editorial   / 2019 மார்ச் 31 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில், அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி சம்பியனானார்.

நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டிருந்த அஷ்லெய் பார்ட்டி, 15 ஏஸ்களுடன் 7-6 (7-1), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

அந்தவகையில், குறித்த போட்டியில் வென்றதன் மூலம் தற்போது உலகின் 11ஆம் நிலை வீராங்கனையாக இருக்கின்ற அஷ்லெய் பார்ட்டி, முதல் 10 வீராங்கனைகளுக்குள் இன்று நுழையவுள்ளார்.

இந்நிலையில், சமந்தா ஸ்டோஸர் 2013ஆம் ஆண்டு உலகின் முதல் 10 வீராங்கனைகளுக்குள் இடம்பெற்ற பின்னர் முதல் 10 வீராங்கனைகளுக்குள் நுழையும் முதலாவது அவுஸ்திரேலியராக அஷ்லெய் பார்ட்டி மாறுகின்றார்.

அந்தவகையில், 2014ஆம் ஆண்டு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதற்காக டென்னிஸிலிருந்து விலகி அவுஸ்திரேலியாவின் பெண்களுக்கான உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக்கில் பங்கேற்ற பின்னர், 2016ஆம் ஆண்டு பெப்ரவரியில் மீண்டும் டென்னிஸுக்குத் திரும்பிய அஷ்லெய் பார்ட்டியின் மாபெரும் வளர்ச்சியை குறித்த வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் முறையே, எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவெய்ட், உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் ஆகியோரை வென்றே அஷ்லெய் பார்ட்டியும், கரோலினா பிளிஸ்கோவாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

அந்தவகையில், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதன் மூலம் உலகின் முதல்நிலை வீராங்கனையாக முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்த சிமோனா ஹலெப், அச்சர்ந்தர்ப்பத்தைத் தவறவிட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .