2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது சிற்றி

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் பெர்ணார்டோ சில்வாவிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ, அதை இன்னொரு மத்தியகளவீரரான பில் ஃபொடெனிடம் வழங்க அவர் அதை தலையால் முட்டிக் கோலாக்கிப் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.

இந்நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்களவீரர் சண் ஹெயுங் மின் கோல் பெறும் மூன்று வாய்ப்புகளைத் தடுத்திருந்த மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்ஸன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மத்தியகளவீரர் கிறிஸ்டியன் எரிக்ஸன், முன்களவீரர் லூகாஸ் மோராவின் கோல் பெறும் வாய்ப்புகளையும் அபாரமாகத் தடுத்திருந்தார். இதுதவிர, சண் ஹெயுங் மின் கோல் பெறும் வாய்ப்பொன்றை மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரர் அய்மரிக் லபோர்ட்டேயும் அபாரமாகத் தடுத்திருந்தார்.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கின் கோல் பெறும் வாய்ப்பை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் காயமடைந்த கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸை பிரதியீடு செய்த போலோ கஸனிஸ்கா காலால் தடுத்திருந்தார்.

அந்தவகையில், குறித்த போட்டியின் முடிவில் 86 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் சிற்றியை விட ஒரு புள்ளி குறைவாக 85 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. 67 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .