2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டது யுனைட்டெட்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் தவறவிட்டுள்ளது.

வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் தவறவிட்டுள்ளது.

இப்போட்டியின் ஆரம்பத்திலேயே மன்செஸ்டர் யுனைட்டெட் பெறப்போகின்றது என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவ்வணியின் முன்கள வீரர் ஜெஸி லிங்கார்ட்டின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் கோல் காப்பாளர் ரூய் பற்றிசியோ தடுத்திருந்தார்.

பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் இன்னொரு முன்கள வீரரான றொமெலு லுக்காக்கு, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தலையால் முட்டியதையும் ரூய் பற்றிசியோ தடுத்தபோதும், 13ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகள வீரர் ஸ்கொட் மக்டொமினி, கோல் கம்பத்திலிருந்து 22 அடி தூரத்திலிருந்து பெற்ற கோலால் மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து ஜெஸி லிங்கார்ட்ட்டின் கோல் கம்பத்தை நோக்கிய மேலுமொரு உதையை ரூய் பற்றிசியோ தடுத்திருந்தார்.

இந்நிலையில், சக முன்கள வீரர் றாவுல் ஜிமென்ஸிடமிருந்து பெற்ற பந்தை வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் இன்னொரு முன்கள வீரரான டியகோ ஜோட்டா கோலாக்கிய நிலையில் கோலெண்ணிக்கையை வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் சமப்படுத்தியது.

அந்தவகையில், இதற்கு பிறகு மேலதிக கோலெதுவும் பெறப்படாத நிலையில், 1-1 என்ற கோல் கணக்கில் முதற்பாதி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் றொமெலு லுக்காக்குவிடமிருந்து பந்தை, அவரின் சக மத்தியகளவீரர் போல் பொக்பா உதைய, அதை கோல் கம்பத்தை நோக்கி ஸ்கொட் மக்டொமினி தலையால் முட்டியபோதும் அதை ரூய் பற்றிசியோ தடுத்திருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே டியகோ ஜோட்டாவை ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் விதிமிறைகளை மீறிக் கையாண்டு ஒரு முறை மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரும் பின்களவீரருமான அஷ்லி யங், 57ஆவது நிமிடத்தில் மீண்டும் அவர் மீது விதிமிறைகளை மீறிக் கையாண்ட நிலையில் இரண்டாவது தடையாக மஞ்சள் அட்டை பெற்று, சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர், போட்டியின் 77ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா பந்தொன்றைப் பிடிக்காத நிலையில், அது அவரின் சக பின்கள வீரர் கிறிஸ் ஸ்மோலிங்கில் பட்டு ஓவ்ண் கோலாக வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களில் அவ்வணியின் முன்களவீரரான இவான் காவலெய்ரோ கோல் கம்பத்தை நோக்கி உதைந்தபோதும் அது கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில் அவ்வணி இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 61 புள்ளிகளையே பெற்றுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்திலேயே தொடர்கின்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸும் 61 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் அவ்வணி கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் காணப்படுகின்றது. 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஆர்சனலும், 60 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. குறித்த போட்டியில் வென்றிருந்தால் 64 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்துக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், மன்செஸ்டர் யுனைட்டெட்டை விட, ஆர்சனல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், செல்சி ஆகியவை ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .