2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன் :காலிறுதியில் தோற்று வெளியேறினார் பெடரர்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து காலிறுதிப் போட்டியோடு நடப்புச் சம்பியனான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் வெளியேறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற உலகின் எட்டாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனுடனான காலிறுதிப் போட்டியில், 6-2, 7-6 (7-5), 5-7, 4-6, 11-13 என்ற செட் கணக்கில் தோற்றே இத்தொடரிருந்து பெடரர் வெளியேறியிருந்தார்.

இதேவேளை, உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நான்காம் நிலை வீரரான ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோவை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 6-3, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கீ நிஷிகோரியை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் 10ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், நேற்று  இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 6-7 (5-7), 7-6 (9-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் றாவோனிச்சை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அந்தவகையில் நாளை இடம்பெறவுள்ள ஓர் அரையிறுதிப் போட்டியில் கெவின் அன்டர்சனும் ஜோன் இஸ்னரும் மோதவுள்ளதுடன் மற்றைய அரையிறுதிப் போட்டியில் நடாலும் ஜோக்கோவிச்சும் மோதவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .