2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்மித், வோணருக்கு ஆயுட்காலத் தடை?

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோணர் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையின் கீழ் மோசடி செய்தமைக்காக ஆயுட்காலத் தடை வரையிலான தடையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கின்றது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னரே திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்த முயன்றமைக்கான முழுமையான பொறுப்பாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகளும் குறித்த போட்டியின் ஊதியத்தின் 100 சதவீதமும் அபாரதமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டதற்கு மேலதிகமாகவே ஸ்டீவ் ஸ்மித்துக்கும் டேவிட் வோணருக்கும் ஆயுட்காலம் வரையான தடை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, பந்தை சேதப்படுத்த முயன்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பான்குரோப்ட் போட்டித் தடையிலிருந்து தப்பித்த போதும் குறித்த போட்டி ஊதியத்தின் 75 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் மூன்று குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் மதிய நேர இடைவேளையின்போது பந்தை சேதப்படுத்துதலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைத்துவக் குழுவே திட்டமிட்டது என கூறப்பட்டிருந்தது.

வழமையாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர், நேதன் லையன், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரே தலைமைத்துவக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அன்று இடம்பெற்ற தலைமைத்துவக் குழு சந்திப்பில், தலைமைத்துவக் குழுவின் சிரேஷ்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் மாத்திரமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்திலேயே, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் கவனம் பெறுகின்ற நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரன ஜேஸன் கிலெஸ்பி ஸ்டீவ் ஸ்மித் நிரந்தரமாக அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நேர்மைக்கான தலைவர் இயன் றோய், அணிப் பெறுபேறுகளுக்கான பொது முகாமையாளர் பற் ஹொவார்ட் ஆகியோர் தென்னாபிரிக்க நேரப்படி நேற்றுக் காலை அங்கு சென்றடைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தென்னாபிரிக்க நேரப்படி இன்று மாலைக்குள் விசாரணை முடிவடைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதகாரி ஜேம்ஸ் சதர்லேண்டும் இன்று தென்னாபிரிக்காவைச் சென்றடையவுள்ளார்.

இதற்கிடையில், ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி விட்டார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் தென்னாபிரிக்காவிலேயே இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பந்தைச் சேதப்படுத்தும் தனது வீரர்களின் திட்டம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமனுக்கு தெரியாமலிருந்தால், அது வழமையற்றது எனத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் புச்சனான், ஸ்டீவ் ஸ்மித் நிரந்தரமாகப் பதவி விலக வேண்டும் என்றவாறான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .