2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘உரிமை வேறு அபிவிருத்தி வேறு என்று சமூகத்தை பிளவுபடுத்த முடியாது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்று கூறி சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முடியாது” என,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வியூகம்பற்றி அவர் இன்று (10) கருத்து வெளியிட்டார். இது குறித்து மேலும் கூறிய அவர்,

“சிலர் சமூகத்துக்கு அபிவிருத்தி முக்கியமா, உரிமை முக்கியமா என விதண்டாவாதத்தை முன்வைக்கின்றனர்.

“யுத்த கால நிவாரணம், வாழ்வாதார உதவித் திட்டங்கள், புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனவற்றிலும் யுத்தத்துக்குப் பின்னரான  மீளமைப்பிலும் முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்களாலும் உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளாலும் கண்டு கொள்ளப்படவில்லை.

“அதேவேளை, யுத்த காலத்திலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்திலும் கோலோச்சிய இனவாத ஆட்சியாளர்களால் இலங்கை முஸ்லிம் சமூகம் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு, அபிவிருத்திகளுக்குள் உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

“எனவே, இழந்து போனதும் எமக்கு இல்லாமற் செய்யப்பட்டதுமான உரிமைகளையும் அதேவேளை அழிக்கப்பட்டமைக்கான மீளமைப்பு அபிவிருத்திகளையும் தண்டவாளம் போல் சமாந்தரமாக அடைந்து கொள்ள வேண்டிய தேவை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்றது.

“இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கின்றது.

“நாம் எதிர்வருகின்ற உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் எமது உறுதியான பலத்துடன் பேரம்பேசுகின்ற சக்தியாக உருவெடுத்து உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள வேண்டும்.

“முதலில் அபிவிருத்தியா, பின்னர் உரிமையா ? முதலில் உரிமையா பின்னர் அபிவிருத்தியா என்ற வெட்டிப் பேச்சுக்கு இனி இடமில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .