2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஒற்றுமையில்லாத சமூகமாக தொடர்ந்தும் வாழ்ந்தால் தமிழினம் அழியும் நிலை உருவாகும்’

வா.கிருஸ்ணா   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் பிழையான நேரத்தில் முடிவுகளை எடுப்பதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே விரிசல் ஏற்பட்டுவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று டொல்பின் விளையாட்டுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டு விழா, புதுக்குடியிருப்பில் நேற்று (22) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தமிழினம் ஒற்றுமையாக இருந்து எமது உரிமைகளை பெறுவதற்கான தேவையை நாம் உணர்ந்திருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியன் காலத்திலிருந்து தமிழினம் என்றாலே ஒற்றுமையில்லாத சமூகமாக நாம் வாழ்கின்றோம்.

“நாம் ஒற்றுமையில்லாத சமூகமாக தொடர்ந்தும் வாழ்ந்தால், எமது இனமே இந்த நாட்டிலிருந்து அழிந்தவிடக்கூடிய நிலை உருவாகும். பெரும்பான்மைச் சக்திகளோ, இந்த நாட்டின் பேரினவாத அரசுகளோ, தமிழினத்தை கூறுபோட்டு சிறுசிறு துண்டுகளாக்கி எமது பலத்தை அரசியல் ரீதியாக அழித்தொழிப்பதற்கு கங்கணங்கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

“கடந்த காலங்களில் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்த நாங்கள் ஒற்றுமையாக போராடினோம். ஆனால் இறுதியில் எமது போராட்டம் ஒற்றுமையின்மையால் திசை திருப்பப்பட்டது.

“கடந்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற உள்ளூராட்சி சபைகளிலே தமிழ் கட்சிகளால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலை உருவாகியது.

“எங்களுக்குள் பிரிவினை, போட்டி உருவாகியது. ஆனால், பெரும்பான்மைக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

“இதுபோன்றுதான், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மைக் கட்சிகள் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியத்தை விரும்புகின்ற கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகியது துரதிஷ்டமான சம்பவமாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .