2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சமஷ்டி தீர்வே தேவை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

“தமிழ் மக்களுக்குரிய இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட்ட வட - கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடனான ஒரு சமஷ்டி தீர்வே அவசியமாகும்” என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு கொத்தியாபுலை ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட இறுதிச்சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“இன்று தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலம். ஏனெனில், 20ஆவது யாப்பு திருத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரையில் நடைமுறைக்கு 3 யாப்புகள் வந்திருக்கின்றன. இதில், தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாஷைகளுக்குரிய அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. இதனால், இந்த யாப்புகள் தொடர்ந்தும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு வந்தன. 

“தற்போது அமையப்போகும் புதிய உத்தேச அரசியல் அமைப்பில்கூட பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கின்ற விடயங்களை கொண்டிருக்கும் என மிகத்தெளிவாக இந்த அரசாங்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது.  

“தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்தினாலும் அழிக்கப்பட முடியாதவை. இருந்தபோதும், நல்லாட்சி வேடம் பூண்டுள்ள இந்த அரசாங்கம், தனது தந்திர நகர்வால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்காத ஒரு புதிய அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கான அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய ஒரு தீர்வுப் பொதியாகக்காட்டி, எமது மக்களின் சம்மதத்தைப் பெற முயன்று வருகின்றது. 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமும் இதற்குச் சம்மதித்துள்ளதுதான் தமிழ் மக்களுக்கான சாபக்கேடாகும். இந்நிலையில், தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் ஒற்றையாட்சிக்குட்பட்டதாகவே நாம் நகரவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் விரும்புகின்ற சமஷ்டி தீர்வை அதாவது, நாம் கிட்டத்தட்ட 70 வருடங்களாக கேட்டுகொண்டிருக்கின்ற நீதிக்கான பாதை தவிடுபொடியாகிவிடும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .