2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்படாதுவிடின், தமிழ் என்ற ‘அடையாளம் அழிந்துவிடும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரியான தமிழ்த் தலைமைத்துவத்தின் கீழ், தமிழ் மக்கள் செயற்படாதுவிடின், தமிழ் என்ற அடையாளம் அழிந்துவிடுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி, தமிழ் இனத்தைச் சிதைப்பதை நோக்கமாக் கொண்டு, பெரும்பான்மைக் கட்சிகள் செயற்படுகின்றனவென்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரனின் ஏற்பாட்டில், சித்தாண்டியில் நேற்று (22) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அனைத்து அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்கின்றார்கள். அப்படியாயின், காலாகாலமாக இந்தப் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற சிங்களப் பகுதிகள், தற்போது தேவலோகமாக மாறியிருக்க வேண்டும்" அவர் கூறினார்.

தமிழர்கள், தமிழர்களாக இருக்கின்ற ஒரே காரணத்துக்காக, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், காலி, கதிர்காமம், மன்னம்பிட்டி இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்கள், தற்போது எவ்வாறு இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பிய அவர், “அங்கே என்ன நடந்தது, அங்கே இருந்த தமிழர்கள், தாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்; தமிழ்ப் பண்பாட்டுடன் வாழவேண்டும் என்பவற்றை மறந்தார்கள்” என்று தெரிவித்ததுடன், அங்கிருந்த தலைமைகளும் பெரும்பான்மை வாசத்தில் கலந்து விட்டார்கள் என்றும், அவ்வாறு சரியான தலைமைத்துவம் இல்லாமையால், அவ்விடங்கள் இல்லாமலே போய்விட்டனவென்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், வடக்கு, கிழக்கில் மக்கள், தமிழ் உணர்வுடன் வாழ வேண்டும் என்று நினைத்தமையால், அதற்கான சிறந்த தலைமைத்துவமும் உள்ளமையால், பெரும்பான்மையின அரசாங்கம், தமக்குப் பல்வேறு விதமான தொந்தரவுகளைச் செய்து கொண்டிருக்கின்றது என்று, துரைராசசிங்கம் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழர்களாக வாழ விரும்புகின்றோம் என்பதற்காகவே, 1952ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை, தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் கட்சிக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.

ஆனால், பெரும்பான்மைக் கட்சிகள் வெவ்வேறு வழிகளில் அதனைக் குலைக்கப் பார்க்கின்றன எனத் தெரிவித்த அவர். பொரும்பான்மைக் கட்சிகளால் மேற்கொள்ளப்படுகின்ற உதவிகள், அபிவிருத்திகள் அந்தக் கட்சிகளின் நிதியில் இருந்து வருவதல்ல, அது அனைத்தும் எம்மிடம் இருந்து பெறப்படுகின்ற பணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"எங்களிடம் இருந்து எடுக்கப்படுகின்ற பணத்தை, நாங்கள் விரும்பியபடி வாழ்வதற்காக எங்களுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்றே, நாங்கள் கோருகின்றோம். அந்த வகையிலான எமது போராட்டங்கள் மூலமே இந்த மாகாணசபைகள் வந்தன. மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள், நிதி மூலங்களைத் தந்தால், எமது மக்களுக்கான சேவைகளை நாங்களே செய்வோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .