2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சவுக்கடிக் கிராம பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள், மதுபானப் பாவனை, சட்டவிரோதச் செயற்பாடுகள், கல்விசார், பாதுகாப்பு சார் பிரச்சினைகள் ஆகியன விரைவில் தீர்த்து வைக்கப்படுமென, மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் உறுதியளித்தார்.

மாவட்டச் செயலாளரின் “மாதம் ஒரு கிராமம்” என்ற கிராம வலத் திட்டத்தின் முதலாவது கிராமமான சவுக்கடிக் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், இன்று (22) நடைபெற்றது.

சவுக்கடி பாரதி வித்தியாலயத்தில், அதன் அதிபர் க.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

சுகாதாரம், போசாக்கு, வீதி அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தொழில்வாய்ப்பு, வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள், வீடு, குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், காணி விடயங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

அத்துடன், இளவயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துதல், சட்டரீதியற்ற திருமணங்களுக்கெதிரான நடவடிக்கைகள், 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளையுடைய குடும்பங்களின் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

மேலும், சவுக்கடி பாரதி வித்தியாலயத்தை தரம் 6இல் இருந்து 11 வரை உயர்த்துதல், விளையாட்டு மைதானம் அமைத்தல், தளபாட வசதிகளை ஏற்படுத்தல், பாடசாலை இடைவிலகலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் இங்கு ஆராயப்பட்டன.

இதேவேளை, ஒவ்வொரு பிரச்சினையும், பொதுமக்கள் முன்னிலையில், குறிப்பிட்ட திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, தீர்வு வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் வகையில் மாவட்டச் செயலாளரால் பணிப்புரைகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .