2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தேர்தல்களுக்காக கட்சிகளைப் பலப்படுத்துவது பற்றிச் சிந்திப்பு’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தற்போது அக்கறையின்றிக் காணப்படுவதுடன்,  தேர்தல்களுக்காக தங்களின் கட்சிகளைப் எவ்வாறு பலப்படுத்துவது என்றே சிந்திக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் தங்களது கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளலாம் என்று தயார் செய்துகொள்வதில் அதிக கவனம் செலுத்துகின்றார்களே தவிர, மக்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் தன்மை குறைந்து செல்கின்றது எனவும் அவர் கூறினார்

ஏறாவூர் எல்லை நகரில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'சகல சமூகங்களையும் சம உரிமையுடன் வாழ்வதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் இடமளிக்க வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் மாறி, மாறி வந்த ஆட்சியாளர்கள் அவ்வாறு ஒருபோதும் சிந்திக்கவில்லை.

தாங்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிகள் என்ற கொள்கையில் இருந்ததன் காரணமாகவே இந்த நாட்டில் பாரிய யுத்தம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான உயிர்கள் மடிந்தன. சொத்துகள் அழிக்கப்பட்டன' என்றார்.  

'2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர், எமது மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் நிலைமை தற்போது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை மேலும் தொடரக்கூடாது என்பதற்காக இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்த போதிலும், தமிழ் மக்களின் கண்ணீருக்குச் சரியான பதில் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது.
'வெறுமனே வெற்றுப் பேச்சுகளையும் கால இழுத்தடிப்புகளையும் இந்த நல்லாட்சி அரசாங்கம்  மேற்கொண்டு வருகின்றது.

'தென்னிலங்கையிலுள்ள மதவாத, இனவாத அமைப்புகள் தற்போது போர்க்கொடியைத் தூக்க ஆரம்பித்து விட்டன. இதனால், சிறுபான்மையின மக்களுக்குரிய தீர்வை வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பயப்படுகின்றது. இது நல்லதல்ல.

'மேலும், வடமாகாணத்தில் முதலமைச்சர் கதிரையை யார் பெற்றுக்கொள்வது, அமைச்சுப் பொறுப்புகளை யார் பெற்றுக்கொள்வது என்று போட்டி போட்டு தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. யாராக இருந்தாலும் சரி, தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தூக்கி ஒருபுறம் வைத்துவிட்டு, வாக்களித்த மக்களுக்காக துரோகம் இழைத்துவிடாது, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு ஒருமித்துப் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .