2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பிரதேச சபைகளும் செயலகங்களும் இணைந்தால் அபிவிருத்தியை அடையமுடியும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 19 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேசத்தை அபிவிருத்திச் செய்வதாயின், அந்தந்தப் பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து, உரிய திட்டங்களைத் தயாரித்து, அவற்றை ஒருங்கிணைந்துச் செயற்படுத்தினாலே ஒழிய, அபிவிருத்தியைக் காண முடியாதென, கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் டீ.எம்.எஸ். அபயகுணவர்தன தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பங்களிப்புடன், சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான கொள்கைப் பரிந்துரைகள் எனும் தொனிப்பொருளில், இன்று (19) இடம்பெற்ற நிகழ்விலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டப் பயிற்சி நிலையத்தில், ஜனதாக்ஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத் திட்ட இணைப்பாளர் அனுலா அன்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பிரதேச சபைகளிலும் பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளும், அந்தந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஆகையால், இவ்விரு அரச அலுவலகங்களிலும் கடமைபுரியும் அதிகாரிகள், அந்தந்தப் பிரதேச மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை முன்னிலைப்படுத்தியதான ஒருங்கிணைந்தத் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

ஓக் (OAK) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில், ஜனதாக்ஸன் மற்றும் சர்வதேச கெயார் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்படித் திட்டம், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை, குறிப்பாக இலகுவில் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரான பெண்கள் மற்றும் இளையோர் சமுதாயத்தை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆளுகையில், அவர்களது செயற்பாட்டுடனான பங்களிப்பைப் பெறவும் அபிவிருத்தியில் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெறவும், தீர்வுகளை வரையறை செய்யவும், அவர்களது தேவைகளையும் முன்னுரிமைகளையும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நிறைவேற்றக் கூடிய திட்டமிடலைப் பெறுவதற்கும், இந்தத் திட்டம் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .