2024 மே 11, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.சரவணன்,  எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று, இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாக கூறி, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது, பேரணியாக காந்திபூங்கா வரையில் சென்று, மீண்டும் மாநகர சபை வரையில் வருகைதந்தது. மாநகர சபையின் வாயில் கதவுகளை மூடியும் குப்பைகள் அள்ளும் வாகனங்களை வீதியில் நிறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர சபையின் பிரதி மேயர், மாநகர சபை ஊழியர்களை கீழ்த்தரமான ஊழியர்கள் என்று கூறி தங்களை அவமானப்படுத்தியுள்ளதுடன், சில உறுப்பினர்கள், மாநகர ஆணையாளரை மோசமான முறையில் விமர்சித்துவருவதாகவும் அவர்கள் மாநகர ஆணையாளரிடமும் ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபையானது ஆணையாளர் வருகைதந்த பிறகு சிறந்த முறையில் செயற்படுவதாகவும் அவற்றைக் குழப்பும் வகையில், மேயர் உட்பட உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் இங்கு ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் பல வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடையாற்றிவரும் நிலையில், தங்களை நிரந்தர ஊழியாகளாக நியமனம் செய்வதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், சில மாநகர சபை உறுப்பினர்கள் தங்களை இடைநிறுத்தப்போவதாக அச்சுறுத்துவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் மா.தயாபரனிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

மாநகர ஆணையாளரிடமும் மாநகர ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை தங்களது போராட்டம் தொடருமென ஊழியர்கள் தெரிவித்தபோதிலும், மக்களின் சேவைக்கு இடையூறு செய்யாமல் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு, மாநகர ஆணையாளர் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக, போராட்டம் கைவிடப்பட்டு, மாநகர சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .