2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முந்தன்குமார வெளியில் பொலிஸார்-பொதுமக்கள் முறுகல்

Editorial   / 2017 ஜூலை 24 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஷ்ணா 

மட்டக்களப்பு, கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில்விஷேட அதிரடிப்படையினரால், நேற்று (24)    மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையடுத்து, ஆற்றில் குதித்து இளைஞனொருவன் பலியான சம்பவத்தையடுத்து, அந்தப் பகுதியில் பதற்றமான நிலையொன்று காணப்பட்டது.  

துப்பாக்கிப் பிரயோகம் செய்த விஷேட அதிரடிப்படை வீரரை தங்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லுமாறு, பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.  

விசேட அதிரடிப்படையினரின் செயலைக் கண்டித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர். அத்துடன், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட, விசேட அதிரடிப்படை வீரரை, தங்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி, அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர்.  

மக்களின், அந்தக் கோரிக்கையை ஏற்பதற்கு பொலிஸார் மறுத்தனர். இதையடுத்து பொலிஸாரின் வாகனத்தை செல்லவிடாது பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் ஆகியோர், சம்பவங்கள் தொடர்பில், சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு, பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.  

அரசியல்வாதிகளின் கோரிக்கையை ஏற்பதற்கு, அங்கு கூடியிருந்த மக்கள்   மறுத்துவிட்டனர். இதனையடுத்து, அரசியல்வாதிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.  

இந்நிலையில், குறித்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்புக்காக, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அங்கு திரண்டிருந்த பொது மக்களை விரட்டியடிப்பதற்காக ஆகாயத்தை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. 

குழுமியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றநிலையில், விசேட அதிரடிப்படை வீரரை, தாம் கைது செய்து, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்த கரடியனாறு பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .