2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அனைத்து சபைகளையும் கைப்பற்​றும்’

எம். செல்வராஜா   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் எமது கட்சியே கைப்பற்றும் என்று, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.  

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச சபை, எல்ல பிரதேச சபை, மீகாகியுல பிரதேச சபை, கந்தகெட்டிய பிரதேச சபை ஆகிய இறுதி நான்கு பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரியிடம் நேற்று முன்தினம் (12) கையளித்தார். இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவும் கலந்து கொண்டிருந்தார். 

இந்த வேட்பு மனுக்களை, மாகாண முதலமைச்சர் கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால், பதுளை மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தயாரிக்க முடியாதென்று பலரும் கூறினர். ஆனால், நாமே முதன் முதலில் வேட்பு மனுக்களைத் தயார் செய்து, மாவட்டத்தின் அனைத்து சட்டரீதியான உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பூரணமாக சமர்ப்பித்துள்ளோம். வேட்பு மனுக்கள் தயாரிப்பதில், எமக்கு எப்பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.  

“ஏனைய கட்சியினர், வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும் இழுபறி நிலை தொடர்ந்த வண்ணமுள்ளன. அது விடயத்தில் பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், நாம் பெருமளவிலான மக்கள் கூட்டத்துடன் சென்று, வேட்பு மனுக்கள் அனைத்தையும் சமர்ப்பித்து விட்டோம். 

“இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதுளை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும். இது தற்போதே உறுதியாகிவிட்டது. எமது கூட்டமைப்பில் எவ்வித இழுபறியும் இருக்கவில்லை. இனிமேல் ஏற்படப்போவதுமில்லை” என்று அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .