2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தால், கடந்த 35 வருடங்களாக, வீடுகள், காணிகளை இழந்து வசிக்கும், கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட நவதிஸ்பன, மொச்சக்கொட்டை, கட்டுக்களை ஆகிய இடங்களில் வசிக்கும் 34 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேரும், நேற்று முன்தினம் (25) முன்னெடுக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்த உண்ணாவிரதப் போராட்டம், கொத்மலை பிரதேசச் செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்படவிருந்தது.  

மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர், கொலப்பத்தனை பகுதியில், காணிகள் வழங்கப்பட்டு, வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் திலகராஜ் உத்தரவாதம் வழங்கியதையத்தே, மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை, இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என, இந்த 34 குடும்பங்களுக்கும் பொறுப்பான தலைவர் எஸ்.மாரிமுத்து தெரிவித்தார்.  

1984ஆம் ஆண்டு துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மேற்படி பிரதேசச் செயலகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்டக் காணிகளிலிருந்து 400 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதுடன் இவர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர்.  

எனினும், தாம் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்திருந்த நவதிஸ்பனை, மொச்சக்கொட்டை, கட்டுக்கலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 34 குடும்பங்களும், தமது நிலம்,குடியிருப்புகள் சொந்தமாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தை​ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.  

இந்நிலையில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், புதிய குடியேற்றம் என்ற பெயரில் பெரும்பான்மை இனத்தவர்கள், இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதுடன், சுவர்ண பூமி காணி உறுதிப்பத்திரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.  

இந்த நிலையில் தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு அகன்று செல்ல விருப்பமின்றி இருந்த நவதிஸ்பனை, மொச்சக்கொட்டை, கட்டுக்கலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 34 குடும்பங்களும், தாம் வாழ்ந்த இடத்தில் வீடுகளும் காணிகளும் சொந்தமாக்கப்பட வேண்டும் என அன்றைய அரசாங்கத்துக்கு வழியுறுத்தியிருந்தனர்.  

எனினும், அந்தக் குடும்பங்களின் கோரிக்கைகளை, அரசாங்கம் ஏற்க மறுத்ததால், தாம் வசித்து வந்த இடத்திலேயே, பெரும்பான்மையினத்தவர்களுக்கு ஒரு தொகை கூலியைச் செலுத்தி, கடந்த 35 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மேற்படி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்குள், இதற்கானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் இல்லையேல், 25ஆம் திகதி, வயது வித்தியாசமின்றி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், 34 குடும்பங்களும் அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்திருந்தனர்.  

இந்நிலையில், மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினூடாக, மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உத்தரவாரதம் வழங்கியதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்ததை அடுத்து, இந்த உண்ணாரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன் தீர்வு வழங்கப்படாவிடின், 16ஆம் திகதி முதல், உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .