2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

களுபோவில கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தம்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. ஷான்

தெஹிவளை-கல்கிஸை மாநகர சபைக்குட்பட்ட களுபோவில வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படும் வைத்தியசாலை கழிவுகளை, தெரணியகலையிலுள்ள லீனியாகல பிரதேசத்தில் கொட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை, பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பல நாள்களாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி நடவடிக்கையை, பொதுமக்கள், நேற்று முன்தினம் (09) இரவு கண்டறிந்தனர். அதனையடுத்தே, அந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

களுபோவில வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படும் ஊசி, சேலைன் போத்தல்கள், மருந்து குப்பிகள் உள்ளிட்ட பல கழிவுப்பொருட்கள், தெரணியகலையிலுள்ள லீனியாகல தோட்டத்தில் கொட்டுவதற்காக லொறியொன்றின் மூலமாக இரவுவேளைகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

அங்குள்ள இறப்பர் தோட்டங்களில் குழிதோண்டிப் புதைப்பதற்காகவே, இந்த கழிவு கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், கழிவுகள் கொண்டுவரப்படுவதைக் கண்ட பிரதேச மக்கள், குறித்த லொறியை மடக்கிப் பிடித்து, இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டபோது, பிரதான கட்சியொன்றைச் சேர்ந்த, தெரணியகலையிலிருக்கும் முக்கியஸ்தர் ஒருவரினாலேயே இக்கழிவுகள் கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்தோடு, இந்தச் சம்பவத்துக்கும் தெரணியகலை பிரதேச சபைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, களுபோவிலை வைத்தியசாலையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை, அரைக்கும் இயந்திரம், பழுதடைந்துள்ளது என்றும் இந்தக் கழிவுக​ளை ஏலவிற்பனையில் எடுத்துக்கொண்டால், அதற்கு, கட்டணங்களைச் செலுத்துவதாகவும் பத்திரிகையில் விளம்பரத்தைக் கண்ட பின்னரே, கழிவுகளை எடுத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு லொறி கழிவுகளை கொண்டு வருவதற்கு, 200,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுவதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, தான் செய்தது தவறுதான் என்று, கட்சியின் முக்கியஸ்தர் ஒப்புக்கொண்டார் என்றும் இனிவரும் காலப்பகுதியில், இவ்வாறு குப்பைகளை எடுத்து வரமாட்டேன் என்று, மக்களுக்கு வாக்குறுதி அளித்தார் என்றும் தெரியவருகின்றது.

அத்தோடு, தற்போது கொண்டுவந்துள்ள கழிவுகள் அடங்கி லொறியை, களுபோவில வைத்தியசாலை நிர்வாகத்திடமே ஒப்படைத்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

எனினும், இந்தச் செயற்பாட்டில், இனிமேல் ஈடுபடமாட்டோம் என்று, பிரதேச சபையின் தவிசாளரும் அமைப்பாளரும், எழுத்துமூல வாக்குமூலம் வழங்கினால் மாத்திரமே, தற்போது கொண்டுவரப்பட்ட லொறியைக் கொடுப்போம் என்றும் இல்லையேல், கழிவுகளோடு சேர்த்து, லொறியையும் எரித்துவிடுவோம் என்றும் தோட்ட மக்கள் கூறியமையால், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த லொறியை ​பிரதேச மக்கள், நேற்றுமுன்தினம் மாலை வரையிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதேவேளை ஸ்தரலத்துக்கு விரைந்த பிரதேச சபை தவிசாளரும், அமைப்பாளரும் கழிவுகளை இனி கொண்டுவரமாட்டோம் என்று எழுத்துமூல வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு, கழிவுகளுடன் லொறியைக் கொண்டு சென்றுள்ளனர்.

தான், முதல்முறையாகவே இவ்வாறு கழிவுகளைக் கொண்டுவந்ததாக, அமைப்பாளர் கூறியிருந்தபோதிலும், இவர் இதற்கு முன்னரும், இவ்வாறான செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார் என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .