2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொத்மலை பிரதேச சபையில் ’இனவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது’

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கொத்மலை பிரதேசத்தில், மூவினத்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதால், இந்தப் பிரதேசத்தில், இனவாதப் போக்குக்கு இடமளிக்கக்கூடாது என்று, கொத்மலை பிரதேச சபையின் உறுப்பினர் பெ.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

கொத்மலை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், நேற்று முன்தினம் (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

கொத்மலை பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கறுப்புப் பட்டி அணிந்து, சபை அமர்வில் பங்கேற்றனர்.

மொட்டு உறுப்பினர்களின் செயற்பாட்டைக் கண்டித்து உரையாற்றும்போதே, பிரதேச சபை உறுப்பினர் பெ.செந்தில்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்காக, காலம் கடந்து கறுப்புப்பட்டி அணிந்தும், எதிர்ப்புப் பதாதைகளுடன் சபைக்கு வரும் மொட்டு உறுப்பினர்கள், அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்கு நேரடியாகச் சென்று, இனவாதம் பேசிய தேருக்கு எதிராக ஏன் கறுப்புபட்டி அணியவில்லை என, அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

மேலும் கூறிய அவர், “கொத்மலை பிரதேச சபையில், கடந்த 25 வருடங்களாக தமிழர் ஒருவரே, பிரதித் தவிசாளராக செயலாற்றி வந்தார். ஆனால் இம்முறை, தமிழ் பிரதித் தவிசாளர் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சபையின் ஆளும் தரப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து, ஸ்ரீ.பொ பெரமுன, சபையை ஆட்சி செய்து வருகிறது” என்றார்.

கொத்மலை பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள், ஏனைய இனத்தவருடன் சகோதரத்துவத்தைப் பேணி வாழ்ந்து வரும் நிலையில், பேதங்களைக் கட்டவிழ்த்து விடுவதைப் போன்று, மொட்டு உறுப்பினர்கள் நடந்துகொள்வதை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்தார்.

எனவே, கொத்மலை பிரதேச சபையில் இனவாதச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்த அவர், இனவாதப் போக்குக்கு எதிராக, தக்க தீர்மானம் ஒன்றை சபை கொண்டுவரவேண்டும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .