2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் 160 பாசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தில், நிரந்தர அதிபர்கள் இல்லாத 160 பாடசாலைக்கு, புதிய அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் இதற்கான அழைப்புக் கடிதங்கள், தகுதிவாய்ந்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், சப்ரகமுவ மாகாண கல்வி கலாசார அமைச்சின் செயலாளர், நேற்று (8) தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில், நிரந்தர அதிபர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் நடத்திய போட்டிப் பரீட்சையிலிருந்து கல்விச் சேவைகள் ஆணைக்குழு தெரிவு செய்த தகுதிவாய்ந்த அதிபர்களுக்கே, இந்த நியமனங்கள்
வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள அநேக தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில், அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் இப்பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை, முழுமையாக நிரப்ப முடியாத நிலைமை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள மொழிமூலமான பரீட்சார்த்திகளுக்கு, கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளே, தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகள் தெரிவு விடயத்திலும் பின்பற்றப்பட்டுள்ளமையால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனால் தமிழ்மொழிமூல அதிபர்கள், போட்டிப் பரீட்சையில் தகுதி பெறும் வாய்ப்புக்கள் நழுவிச் சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இப்போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தகுதிபெற்ற தமிழ், முஸ்லிம் அதிபர்களுக்கு, நேர்முகத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட பொறுத்தமற்ற விதிமுறைகள் காரணமாக,  நியமன வாய்ப்பு இல்லாமல் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தமிழ்மொழிமூலப் பரீட்சையில் சித்தியடையும் வெட்டுப்புள்ளி உட்பட சகல நடைமுறைகளும் தீர்மானங்களும் தமிழ்மொழிமூலப் பாடசாலை வெற்றிடங்களுக்கு அதிபர்களை தெரிவாகும் வாய்ப்பை  வழங்கக்கூடியதாக அமைய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்விடயங்கள் குறித்து பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கானத் தீர்வுகள் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .