2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“ஜனாதிபதி மலையக கைதிகளை மறந்துபோனது கவலையளிக்கிறது”

Editorial   / 2018 மே 01 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.கிளின்டன்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது. எனினும் மலையக சமூகத்தைச் சார்ந்தவர்களும் சிறைகளில் உள்ளனர் என்பதை, ஜனாதிபதி மறந்து போனதும், அவர்களையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையுமானது, மிகுந்த  வேதனையை அளித்துள்ளது என்று, ஊவா மாகாண அமைச்சரும் இ.தொ.க.வின்
உபதலைவருமானசெந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்​கையில், “பெளத்தர்களின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, வருடாவருடம் வெசாக் தினத்தில் சிறு குற்றங்களுக்காக சிறைப்பட்டிருக்கும் கைதிகள், விடுதலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்நடவடிக்கை உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.

“அந்தவகையில், இம்முறையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, அதனூடாக இடம்பெற்ற கைதிகளின் விடுதலை ஆகியவற்றை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கிறது.  எனினும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள், வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் மலையக மக்கள் குறித்தும், மலையக சமூகத்தைச் சேர்ந்த கைதிகளின் விடுதலை குறித்தும் ஜனாதிபதி சிந்திக்க தவறியமை, எமக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது” என்று கூறினார்.

மேலும், “சிறு குற்றங்களுக்காக சிறைப்பட்டிருப்போரின் பட்டியலில், மலையக சமூகத்தை சேர்ந்தோர் இணைத்து கொள்ளப்படாமை, விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படாமை சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், எம்மீதான புறக்கணிப்பும் இடம்பெற்றிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த  தமிழ் அரசியல் கைதிகள், தொடர்ச்சியாகவே இருபது வருடங்களைக் கடந்தும் சிறையில் வாடுகின்றனர். இவர்களது விடுதலையை வலியுறுத்தி தலைவர் ஆறுமுகன் தலைமையிலான, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. எனினும் அவர்களது விடயத்தில் அரசாங்கம் பராமுகமாகவே இருந்து வருகின்றது.

“அத்துடன் அவர்களது விடுதலை குறித்து, அக்கறையீனமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழர்களையும் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளது.

“எது எவ்வாறு இருப்பினும், சிறைகளில் இருப்போர் விடுவிக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள், மலையக சமூகத்தைச்  சார்ந்த கைதிகள் ஆகியோரின் விடுதலை தொடர்பில், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போது, மலையக சமூகத்தைச் சேர்ந்த சிறுகுற்றங்களுக்காக சிறைப்பட்டவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறிக்கொள்கின்றோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .