2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஜூன் 1 முதல் அமுலாகும்’

Editorial   / 2018 மே 30 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.சுஜிதா

தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் நலன்கருதி, குறித்த நகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நாளை முதல் (01) அமுல்படுத்தப்படுமென, நகரசபைத் தலைவர் அசோக சேபால தெரிவித்தார்.

வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படும்

அந்த வகையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும், தலவாக்கலை நகரினுள் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தலவாக்கலை நகரில் பரவலாக முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் வான்கள் நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், ஜூன் 1 முதல், அவ்வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த முடியாதென்றும், சுழற்சி முறையிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டுமென்றும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குப்பைகளை வகைப்படுத்தல்

தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட மக்கள், குப்பைகளை உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் என வகைப்படுத்தியே, நகரசபையின் குப்பை சேகரிக்கும் வாகனத்துக்குள் இடவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கும் உரிய வகையில் கழிவுகளை வேறாக்கி வழங்காதவர்களுக்கும் எதிராக, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாப்புச்சட்டம் அமுல்

தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதியும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், மாதத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 2 மற்றும் 16ஆம் திகதிகளில் வரும் சனிக்கிழமைகளில், தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டுமென்றும் டிசெம்பர் மாதம் வரை, குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்படும் திகதி விவரங்கள் அடங்கிய படிவம், சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .