2024 மே 08, புதன்கிழமை

தண்டவாளத்தில் பயணிக்கும்போது கவனம் தேவை

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், பி.சிவா, எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்

 

நாவலப்பிட்டியில், நேற்று முன்தினம் (02), ரயிலில் மோதி உயிரிழந்த மாணவர்களின் சடலம், நேற்று (03) மாலை 4.10 மணியளவில், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களின் பிரேத பரிசோதனை, நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. பிரேத பரிசோதனையின் அறிக்கையில், கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு மாணவர்களும், இம்முறை டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர் என்றும் தனியார் வகுப்புகளுக்காகச் சென்று, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் போதே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரித்துள்ளனர்.

தனியார் வகுப்பு இருக்கும் இடத்திலிருந்து, தங்களது வீட்டுக்குச் செல்லும் போது, ரயில் தண்டவாளம் வழியாக செல்வது இலகுவானது என்பதாலேயே, இருவரும், அவ்வழியே நடத்துச் சென்றுள்ளனர் என்றும் எப்​போதும் இந்த மாணவர்கள் இருவரும், தண்டவாளம் வழியேதான் நடந்துச் செல்வார் என்றும் தெரியவந்துள்ளது.

தனியார் வகுப்பு முடிந்து, நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களும், ஜயசுந்தரப் பிரதேசத்தில் வைத்து, கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிரிழந்த மாணவியின் உடல், இரண்டு துண்டுகளாகிய நிலையிலேயே மீட்கப்பட்டதோடு, மாணவனின் சடலம், முற்றாக சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

நாவலப்பிட்டி தெகிந்த பகுதியைச் சேர்ந்த ஹர்ஷ குமார எனும் 16 வயதுடைய மாணவனும் நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பாக்யா செவ்வந்தி எனும் 15 வயதுடைய மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என, அடையாளம் காணப்பட்டனர்.

தண்டவாளத்தில் நடத்துவந்த மாணவி, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வந்ததாகவும் ரயில் வரு​வதைக் கண்ட மாணவன், மாணவியைக் காப்பாற்றிவிட்டு, தானும் தப்பிச் செல்ல முயன்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், ரயிலில் மோதி 67 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர், ரயில் தண்டவாளத்தில் நடந்துச் சென்றவர்கள் என, ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம், 570 பேர், இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ரயில் போக்குவரத்துப் பாதையில் தண்டவாளத்திலும் தண்டவாளங்களுக்கு அருகிலும் பாதுகாப்பற்ற முறையில் பயணஞ்செய்யும் பொதுமக்கள் தொடர்பில், தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் ரயில் மார்க்கத்தில் பயணிப்பதன் காரணமாக, நாளொன்றுக்கு 2 முதல் 3 பேர் வரையில் மரணிப்பதாகவும் எனவே இந்நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் மீதான சட்டத்தை மேலும் பலப்படுத்தி, விபத்துகளை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக,  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தண்டவாளத்தில் பயணிக்கும் போது, மிகவும் அவதானமாக பயணிக்குமாறும், அ​லைபேசிகளை பயன்படுத்தியவாறு பயணிக்கவேண்டாம் என்றும், ரயில்களின் ​நேர அட்டவணையை கவனத்தில் கொள்ளுமாறும் ரயில்வே கட்டுப்பாட்டறை, கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X