2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் இருப்பை ’நிதானத்துடனும் தக்கவைத்து வருகிறோம்’

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்கள், இந்துக்களின் இருப்பை, முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் இப்பொழுது இந்த நாட்டில் உறுதிப்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் மனோ கணேசன், எங்கள் இருப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, எங்கள் ச​கோதர இனத்தவர்களதும் மதத்தவர்களதும் அன்பையும் ஆதரவையும் பெற்று, அவர்களையும் ஆதரிக்க வேண்டுமென்றும் இவை இரண்டும், சமாந்தரமாக இடம்பெற வேண்டுமென்றும் கூறினார்.

இருப்பை மாத்திரம் உறுதிப்படுத்துவோமானால், அது சகோதரர்களின் பகைமையைப் பெறுவதாக அமைந்துவிடும் என்று கூறிய அமைச்சர், இருப்பை விலைபேசி விற்றுவிட்டு அரவணைத்தால், நாம் காணாமற் போய்விடுவோம் என்றும் கூறியதோடு, இவற்றை சமாந்தரமாகச் செய்யும் பக்குவம் எம்மிடம் இருப்பதாகவும் அந்த யதார்த்தத்தையும் சூ​லையும் இங்கு காண்பதாகவும் கூறினார்.

உகந்தை ஸ்ரீ முருகன் கோவில் நுழைவாயில் கோபுரத் திறப்பு விழாவும், உகந்தை முருகன் கோவிலிலிருந்து, கதிர்காமத்துக்கான குமண காட்டுவழிப் பாதையைத் திறந்துவைக்கும் நிகழ்வும், நேற்று (27) காலை, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது. அங்கு ​உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சைவர்களாகிய நாங்கள், உகந்தை முருகனின் அருளால், வழிகாட்டலால் இந்தனக் கானக வழியூடாகக் கதிர்காமக் கந்தனின் அருளைப் பெறுவதற்காக, வருடாந்தம் பாதயாத்திரை செல்வதாகவும் இந்த பாதயாத்திரைக்காக, வருடாந்தம் இந்துக்கள், தமிழர்கள் அல்லாத பலரும் பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாலேயே இன்று நாம் எமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் உகந்தை முருகனின் இராஜகோபுரம், பல மைல்கள் தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியுமளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமெனத் தான் நினைப்பதாகவும் ஆகவே, வெகுதூரத்திலிருந்து அடையாளம் காணுமளவுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அதை நிர்மாணிப்போமென்றும் கூறினார்.

இந்தப் பாதயாத்தி​ரை, ஒரு தேசியப் பாத்திரையாக அங்கிகரிக்கப்பட வேண்டுமென்று, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூரவ அணுசரனை வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் யாத்திரையையும் முஸ்லிம்கள் மக்காவுக்கும், பௌத்தர்கள் புத்தகயாவுக்கும் செல்வதை, அரசாங்கம் புனித யாத்திரையாக எவ்வாறு அறிவித்துள்ளதோ, அதேபோல், இந்தப் பாதயாத்திரையை புனித யாத்திரையாக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை, வெகுவிரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த வாரமளவில் அப்பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றார்.

“இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் வரலாற்று, ரீதியான உறவுகள் இருந்தததை நாம் அடையாளங்கண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் எம்மத்தியில் இருந்து வேறுபாடுகளை கண்டுபிடித்து சண்டையிட்டு வந்தோம். ஆனால் இப்போது, ஒருமைப்பாடுகளைக் கண்டுபிடித்து நாங்கள் ஒன்றுபட வேண்டிய சூழல் வந்துள்ளது.

“தேசிய ஒருமைப்பாடு கட்​டியெழுப்பப்பட வேண்டுமானால், அதற்கு முதற்படியாக சமத்துவம் பேணப்பட வேண்டும். இதன் மூலம்தான், ஒற்றுமை ஏற்படும். சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக, நிதானமாகச் ​செயற்பட வேண்டும். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த எங்கள் அடையாளங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கும் கடப்பாடு எனக்கு இருக்கிறது” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .