2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“தோட்ட முகாமையாளர்களின் பங்களிப்பு அவசியம்”

Kogilavani   / 2017 ஜூன் 22 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளி பெருந் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்ற போதிலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில்தான் அவர்களுக்கு காணி உறுதியுடன் கூடிய தனி வீடமைப்புத் திட்டம், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே, தோட்டங்களில் அந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கு, முகாமையாளர்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்” என, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழினி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.

கண்டி, நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரதேசங்களிலுள்ள தோட்ட முகாமையாளர்களுடனான கலந்துரையாடல், நுவரெலியா கொல்ப் விருந்தகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தொழிலாளர்களின் பிரச்சினைகள், தோட்ட உத்தியோகதர்களின் பிரச்சினை மற்றும் தொழிற்சங்கப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையில், முகாமையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் செயற்பாடுகளில் நான் ஒரு போதும் அனாவசிய தலையீடுகளை மேற்கொள்வதில்லை. அதேநேரம், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தோட்டங்களை சுமுகமான முறையில் நடத்துவதற்கு கம்பனிகள் கரிசனைக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

“இலங்கையிலுள்ள பெருந்தோட்டத் துறைக்கு, இந்திய வம்சாவளி மக்கள் அழைத்து வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. எனினும், இதுவரை காலமும் அவர்களின் குடியிருப்பு வசதிகள், உரிய முறையில் கவனிக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்துள்ளது. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில்தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு, தலா ஏழு பேர்ச் காணியுடன் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய நூறு நாள் வேலைத் திட்டத்தில், வீடமைக்கும் பணி ஆரம்பமாகியது.

“அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றி பெறாது, எனது அமைச்சும் அத்தோடு காணாமற் போய்விடும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, வீடமைப்புத் திட்டம் தகுந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

“தோட்டத் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்தவன் என்ற அடிப்படையில், என்னை உருவாக்கிய பெருதோட்ட சமூகத்துக்கு உருப்படியான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஏற்ற வகையில், புதிய கிராமங்களை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு, வசதியான குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்து வருகின்றேன்.

“தோட்டங்களில் லயன் முறை ஒழிக்கப்பட்டு, அனைத்து மக்களும் சொந்தக் காணிகளில் சொந்த வீடுகளில் வசிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எனவே, தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, தோட்ட நிர்வாகங்கள் பூரண ஒத்துழைப்புகுளை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .