2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நிலவுரிமை, வீட்டுரிமை தொடர்பில் அழுத்தம் மேலெழுகிறது’

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் தேயிலைத் தொழிற்றுறை 150 வருடங்களைக் கடந்துள்ள போதும், தற்போதுதான் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலவுரிமைகளும்  வீட்டுரிமைகளும் தேவை என்ற நிலைப்பாடு, அழுத்தமாக வலியுறுத்தப்படுகின்றது” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தலைவாக்கலை, லோகி தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (26) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“தலவாக்கலை லோகி தோட்டத்தில் அனர்த்தத்துக்கு உள்ளாகவுள்ள தோட்டக்குடியிருப்பைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்குத் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக, அமைச்சர் திகாம்பரம், தனது அமைச்சின் ஊடாக 15 மில்லியன் ரூபாயை செய்துள்ளார். கட்சி, தொழிற்சங்க பிரிவினைகளைப் பார்க்காது உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே, இந்த வீடுகள் கிடைக்கவுள்ளன.

“தமிழகத்திலிருந்து கூலிகளாக அழைக்கப்பட்டு வந்த எமது சமூகம், ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பின்னர் கோப்பி பயிர்ச்செய்கை கைவிடப்பட்டு, தேயிலை தொழிற்றுறை அறிமுகப்படுத்தப்பட்டதால், எமது சமூகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இவ்வருடத்துடன் 150 வருடங்களாகின்றன.

எனினும், தற்காலிக இருப்பிடங்களாக அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புக்கள், இன்று நிரந்தரக் குடியிருப்புக்களாக மாறிவிட்டன.

“எமது சமூகத்துக்கு நிலவுரிமையும் வீட்டுரிமையும் தேவை என்ற கோஷம் காலந்தோறும் முன்வைக்கப்பட்டு வந்த போதும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தான் இந்த உரிமைகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

“கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுப்பதவிகளை வகித்தவர்களால் சாதிக்க முடியாதவைகளை இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சர்களான திகாம்பரம், மனோகணேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாதித்து வருகின்றனர்.

“தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிலத்தைப் பெற்றுக்கொள்வதில் கடந்த காலங்களில் தோட்டக்கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் பல்வேறு இடையூறுகளை செய்தன. இருந்த போதும் இன்று அவைகள் எமக்கு மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

“எனவே, மலையகத்தில் தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு, இந்த மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைத்து வருவதானது வரவேற்கத்தக்க விடயமாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .