2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த 18 பேர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதென்றும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தமது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாது நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 18 பேர், கொழும்பு புறக்கோட்டையில், 14 நாள்களாகத் தங்கியுள்ளனர். 

உணவின்றி, மலசலகூட வசதிகளின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்ட அவர்கள் தொடர்பில், சமூக ஊடகமொன்றில் தகவல் பரவியதையடுத்து, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் விரைந்துச் செயற்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைவாக, அந்த இளைஞர்களை, செந்தில் தொண்டமான் இன்று(6)ற (6) காலை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அவ்விளைஞர்கள் கடந்த 14 நாள்களாக பாதுகாப்பின்றி இருந்ததால், அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்கு, சுகாதார அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் அனுமதி மறுத்ததாகவும் இதன் காரணமாக, அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு, ஒருவரும் முன்வராததன் காரணமாக, இராணுவத் தளபதியுடன் கதைத்து அவர்களை, இராணுவ கண்காணிப்பு மய்யங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதிலும் இராணுவ மய்யங்களிலுள்ளவர்களின் பாதுகாப்பு, மேற்படி இளைஞர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேற்கொண்ட நீண்ட நேர கலந்துரையாடலையடுத்து, அவ்விளைஞர்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்கான அனுமதி கடிதத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக மேற்படி இளைஞர்கள், 14 நாள்கள் கண்காணிப்பிலிருந்ததன் பின்னர், அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .