2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்டத் துறையின் ’அபிவிருத்திச் சுகாதார சுட்டிகள் மிக மோசமாக உள்ளன’

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஏனைய நாடுகளைவிட, இலங்கையின் அபிவிருத்திச் சுகாதாரச் சுட்டிகள், மிகச் சிறந்த நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், எனினும், இலங்கை எனும் தீவுக்குள், பெருந்தோட்டத்துறை எனும் தனியான பிரிவு காணப்படுவதாகவும், அந்தப் பிரிவின் அபிவிருத்திச் சுட்டிகள், மிக மோசமான நிலையிலுள்ளதாகவும் விமர்சித்தார்.

மலையக அபிவிருத்தி அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (07) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை, 1.5 மில்லியன் என்றும் இலங்கையின் உத்தியோகபூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பை நம்ப வேண்டாமெனவும் கூறினார்.

மலையகம் அல்லது இந்தியத் தமிழர்கள் அனைவரும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்ற கருத்தை நிராகரித்த அவர், மலையகத் தமிழர்களில் 200,000 பேரே, பெருந்தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர் என்றும் விளக்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ் மக்களையே, அக்கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் தெரிவித்த அமைச்சர், தமிழ் முற்போக்குக் கூட்டணி, வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று வரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இணைந்தே செயற்படுவதாகவும் தெரிவித்த அவர், கூட்டணியின் முயற்சியால், மலையகத்தில் ஆறு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அதேபோன்று, பெருந்தோட்டத் துறைகளிலுள்ள பாடசாலைகளுக்கு, மேலும் அதிக காணிகளைப் பெற்றுக்கொள்ள, அமைச்சரவைப் பத்திரங்கள் பலவற்றுக்கான அங்கிகாரம் கிடைத்துள்ளதென்றும் தெரிவித்தார்.

அத்துடன், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .