2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் சூடுபிடித்துள்ள கூட்டு ஒப்பந்த பேச்சு

Editorial   / 2018 ஜூன் 01 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்காக செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பில், பல மட்டங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வழமையைவிட இம்முறை, கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் மலையகத்தில் சூடுபிடித்துள்ள அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இதனால் அழுத்தங்கள் கொடுக்கப்படலாமென, பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தினூடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான சரத்துகளை உள்ளடக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள மலையக அமைப்புகள், எவ்வாறான விடயங்களை உள்ளடக்க வேண்டுமென்பது தொடர்பில், பல மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, மலையகச் சமூக ஆய்வு மையம், கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள், தமிழர் பண்பாட்டுக் கழகம், மலையக இளம் ஊடகவியளாளர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, வெள்ளவத்தை லோரன்ஸ் தேவாலய மண்டபத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், மலையக இளைஞர், யுவதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்கேற்றதுடன், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்கள் தொடர்பில் இரகசியம் பேணிப் பாதுகாக்கப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல தொழிற்சங்கங்களின் தலைவர்களும் அருட்தந்தை ம.சக்திவேல் உள்ளிட்டோரும், தொடர்ச்சியான பல கருத்துகளைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

‘தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி  போராடுவேன்’ - வடிவேல் சுரேஷ் எம்.பி

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், தொழிலாளர்களுடன் ஒன்றுகூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னரே, பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், இம்முறை தொழிலாளர்களுக்கு, நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முன்நின்று செயற்படவுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கமென்றும், அதற்காகப் பாடுபடுவதாகவும் தெரிவித்த அவர், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவில்லையெனில், கூட்டு ஒப்பந்ததில் கையொப்பமிடப்போவது இல்லையென்றும், இதற்காக, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிப் போராடவுள்ளதாகவும் கூறினார்.

‘வாயை மூடிக்கொண்டு  இருந்தால் போதும்’-  எஸ்.அருள்சாமி (இ.தொ.கா)

கூட்டு ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில்,  அதற்கு முன்பதாகவே, மலையக அமைச்சர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும், அவ்விடயத்தைக்  கையிலெடுத்துக் கொண்டுள்ளனரென, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக, மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளையும் மேற்படி தரப்பினர் இல்லாமல் செய்யவுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.அருள்சாமி, மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தாமல், வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதுமெனவும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் இ.தொ.கா, எப்பாடுபட்டேனும் பெற்றுக்கொடுக்கும் என்றும் தெரிவித்தார். கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது, இடைக்கால ஒப்பந்தம் என்ற ஒன்றைக் கொண்டுவந்த மலையக அமைச்சர்களே, கூட்டு ஒப்பந்தத்தை இழுத்தடித்தனரெனச் சாடிய அவர், இடைக்கால ஒப்பந்தத்தினூடாக, இரண்டு மாதக் கொடுப்பனவே பெற்றுக்கொடுக்கப்பட்டதெனவும், அதன்பின், அந்தக் கொடுப்பனவுகளுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருவதாகவும், மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில், இ.தொ.கா ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தில், தொழிலாளர்களுக்கு நியாயமான சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க இ.தொ.கா முன்னின்று செயற்படுமென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.

‘ரூ.1,000 எமது நிலைப்பாடு’ - எஸ்.இராமநாதன் (ல.தோ.தொ.ஒ)

தோட்டத் தொழிலாளர்களது நாட்சம்பளம், ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானமானதாக இருக்க வேண்டும் என்பதே, தமது நிலைபாடாகுமெனத் தெரிவித்த, லங்கா தோட்டத் தொழிலாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்டத் தொழிற்சங்கச் செயலாளர் நாயகமுமான எஸ்.இராமநாதன், இவ்விடயத்தில் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரும், தங்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசாங்கத்துக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் நலன்சார்பில் செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு இறுதியாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் நாளாந்தச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், எனினும், இன்றைய சூழலில் மக்களின் பாவனைக்குரிய சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன என்றும், ரூபாயின் மதிப்பு என்றுமில்லாதவாறு குறைந்துள்ளதெனவும் விமர்சித்தார்.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனரெனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக தொழிலாளர்களின் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“மேலும், தோட்டங்கள் காடுகளாகிவிட்டன. தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, தோட்ட நிர்வாகங்கள் கூறிவருகின்றன. இதற்கான காரணம் என்ன என்பதை, அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் ஆராயவேண்டும். இன்று, தோட்டங்களில் தொழில்செய்வதற்கு தொழிலாளர்கள் விரும்பாது, வெளியிடங்களுக்குச் சென்று தொழில் புரிகின்றனர். இவ்வாறானவர்கள், நாளொன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

“எனவே, தொழிலாளர்களை தோட்டங்களில் முறையாகக் கவனித்து, அவர்களுக்கு அதிகரித்த சம்பளத்தை வழங்கினால், தொழிலாளர் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேசமயம், தோட்டங்களையும் முறையாகப் பராமரித்துக் கொள்ளமுடியும்” என அவர் மேலும் கூறினார்.

இவற்றை வலியுறுத்தியே தாம் இம்முறை பேச்சுவார்த்தையில் ஈடுபவுள்ளதாகக் கூறிய அவர், அதேசமயம் இவ்விடயம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய சங்கங்களோடும், பெரும் தோட்டதொழிற்சங்கக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களோடும் கலந்துரையாடி, பொது இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஆராய கூட்டணியும் கூடுகிறது?

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்களும், எதிர்வரும் வாரம் ஒன்றுகூடி ஆராயவுள்ளனரென, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம், எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இடம்பெறலாமென நம்பப்படுகிறது. இதன்போது, தோட்டத் தொழிலாளர்களின் நன்மைகருதி, பல்வேறு தீர்மானங்கள் எட்டப்படவுள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .