2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆசனப் பங்கீடு விவகாரம் குழப்பம் தீரவில்லை ; மீளவும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், தொடர்ந்தும் கூட்டமைப்பின் இடைநிலைத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய ஆட்சேபனைகளை, கட்சித் தலைவர்களிடத்தே தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில்,  ஆசனப் பங்கீடு தொடர்பாக பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இதையடுத்து, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, இணக்கப்பாடு ஏற்பட்டதாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனபோதிலும், தமிழரசுக் கட்சியின் தலைமை பங்காளிக் கட்சிகளுக்கு சகலதையும் தாரை வார்த்துவிட்டதாக, தமிழரசுக் கட்சியின் இடைநிலைத் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இதேபோன்று, வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசு கட்சி தமது உறுப்பினர்களையே முன்னிறுத்தி ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை உள்வாங்கவில்லை என்றும் ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை முன்நிறுத்துவதாகவும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை உள்வாங்கவில்லை என்றும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள் தொடர்பாக கடுமையாக அதிருப்தியுற்று இருக்கின்ற தமிழரசுக் கட்சியினர், இவ்விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து, கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பேச்சுவார்த்தையொன்றை மீளவும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .