2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடத்தனை வாள்வெட்டில் ஒருவர் பலி; மூவர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்., குடத்தனை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவங்களில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நேற்று (29) அதிகாலை 12 மணி முதல் 4 மணி வரையிலான நேரப்பகுதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் புகுந்த நப​ரொருவர் உறக்கத்தில் இருந்தவர்கள் மீதே தாக்குதல்கள் நடத்தி, வாள்வெட்டை மேற்கொண்டுள்ளார்.

முதலாவது வாள்வெட்டுத் தாக்குதல், பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66),  அவரது மனைவி நிர்மலாதேவி (வயது 53) என்பவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது. அதில், பரம்சோதி உயிரிழந்துள்ளார்.

அவ்விடத்திலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள மற்றொரு வீட்டுக்குள் புகுந்த தாக்குதலாளி, ​ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எம். சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி. ஜெயந்தி (வயது 40) ஆகியோர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த அவ்விருவரும் சிகிச்சைக்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டை மேற்கொண்ட பின்னர் ஜெயந்தியின் முகத்தை "பெட் சீட்டால்" மூடிக்கட்டி வீட்டிலிருந்து சுமார் 20 மீற்றர் தூரத்துக்கு, நிலத்திலேயே இழுத்துச் சென்று அருகில் இருந்த காணிக்குள் அவரை கைவிட்டுவிட்டு தாக்குதலாலி சென்றுள்ளார்.

அங்கிருந்து சென்ற தாக்குதலாளி, பின்னர் அப்பகுதிகளில் நடமாடித் திரிந்த வேளை அயலவர்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்டுள்ளனர். எனினும், மின்குமிழ்களை அணைக்குமாறு சிங்களத்தில் கூறியுள்ளார். அவ்வாறு பேசியவர், இராணுவம் அல்லது பொலிஸாராக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் அயலவர்களும் மின்குமிழ்களை அணைத்துள்ளனர்.

பின்னர் அதிகாலை 4 மணியளவில் இறுதியாகத் தாக்குதல் நடத்திய வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ளே வீடொன்றுக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தாக்குதலாளி உட்புகுந்த வேளை வீட்டார் விழிப்பாக இருந்ததனால் தாக்குதலாளியை அடையாளம் கண்டு விசாரிக்க முற்பட்ட வேளை தாக்குதலாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த தாக்குதலாளி, அப்பகுதியைச் சேர்ந்த தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவ்வப்போது அவரது வீட்டில் குடும்பத் தகராறுகள் ஏற்படும் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலாளி, தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளைத் திருமணம் செய்துள்ளார் என்றும், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரிவித்த பருத்தித்துறைப் பொலிஸார், சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .