2024 மே 02, வியாழக்கிழமை

‘தோட்டத் தொழிலாளர்களுக்காக வடக்கிலிருந்து 10 ஆயிரம் கையெழுத்துகள் சேகரிப்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

“மலையக தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடமாகாணத்திலிருந்து 10 ஆயிரம் கையெழுத்துக்களை சேகரித்து அரசாங்கத்துக்கு அனுப்பவுள்ளதுடன், 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கு என பதாகையை சட்டையில் அணிவதுடன், பொது நாட்களில் கறுப்புச்சட்டை அணிவதற்கும் தாம் தீர்மானித்துள்ளதாக” வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

“தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தோட்ட கம்பனிகளும் அந்த மக்கள் பிரதிநிதிகளும் நிறைவேற்றவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள ஆளுநர், இதனை வழங்கக்கம்பனிகள்; தயாரில்லை என்றால் அந்தக் கம்பனிகளை மூடிவிட்டு அக்காணிகளை மக்களிடத்தே ஒப்படைத்து விட்டு அவர்கள் வெளியேற வேண்டுமென்றும்” குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“150 வருடங்களாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் தேவையான அளவு மாற்றங்கள் எவையும் உண்டாக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள மற்றய தமிழ் பேசும் சமூகங்களை விட மலையக தமிழர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்போது அவர்கள் 1000 ரூபாயாக தமது சம்பளத்தை அதிகரிக்கும்படி கேட்கிறார்கள்.

அதனால் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தில் தற்போது வாழ முடியுமா? ஆகவே எந்த நிபந்தனையும் இல்லாமல் சம்பளஉயர்வு அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமது உழைப்பையும், உடலையும் தேயிலை தோட்டங்களுக்குகொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும்.

அவர்களுக்காக பொது அமைப்புக்கள், சமூகஆர்வலர்கள் இணைந்து போராட்டங்களை நடாத்த வேண்டும். வடமாகாண மட்டத்தில் நாம் மலையக மக்களுடைய சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக சுமார் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதேபோல் 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்கு என்ற பதாகைகளை சட்டையில் அணிவதுடன்,

பொது நிகழ்வுகளில் கறுப்புசட்டை அணிந்து மலையக மக்களுடைய சம்பள உயர்வு கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம். அதனை விடவும் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகளை இன்றே ஆரம்பிப்பதற்குமான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .