2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாவற்குழி வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதவானின் விசாரணைகள், ஓகஸ்ட் முதலாம், இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் என்று திகதியிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றில் நீதவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்குகளின் முதலாவது பிரதிவாதியான இராணுவ அதிகாரி  துமிந்த கெப்பிட்டிவலான, இரண்டாவது பிரதிவாதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும் சட்ட மா  மன்றில் முன்னிலையாகவில்லை. 

இதன்போது, இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“மேல் நீதிமன்ற நீதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தில் பிரதிவாதிகளை இன்று இந்த மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று நீதவான் எடுத்துரைத்தார்.

“மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், பிரதிவாதிகளை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்றின் அறிவுறுத்தலை ஏற்று அதனைப் பிரதிவாதிகளிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதி செய்வதாகவும் இராணுவ சட்டத்தரணி மேல் நீதிமன்றில் அன்றைய தினம் மன்றுரைத்திருந்தார். 

“ஆனால், இன்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று அவர்களது சட்டத்தரணி குறிப்பிடுகிறார்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பும் ஆவணங்களை மனுதாரர்களின் சட்டத்தரணியை மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது.

“இந்த மனுக்களில் முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் முன்னிலையாகும் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர வெளிநாடு ஒன்றில் இடம்பெறும் கருத்தமர்வுக்குச் சென்றுள்ளதால், அவர் இந்த மன்றில் முன்னிலையாக வசதியாக வழக்கு விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம், இரண்டாம் திகதிகளில் ஒத்திவைக்குமாறு இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

“இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடிக்க மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால், 4 வாரங்களில் அடுத்த தவணையை மன்று வழங்க வேண்டும்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் கஜநிதிபாலன், மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .