2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மேல் மாகாணத்திலுள்ள வெளி மாவட்டத்தாரை வெளியேற்றுவதில் சிக்கல்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், மேல் மாகாணத்திலேயே நிலைகொண்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கு, உரிய சுகாதார வேலைத்திட்டமொன்று அவசியமென்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, மேல் மாகாணத்தில் சிக்குண்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவது மனிதாபிமான நடவடிக்கையாயினும், உரிய நடைமுறைகளின்றி அதை மேற்கொள்வதாயின், நாடு முழுவதிலுமுள்ள மக்களைப் போன்றே, சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரும், தேவையற்ற சிக்கலை எதிர்கொள்ள நேரிடுமென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதாயின், மூன்று நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் தெரிவித்துள்ள அவர், அந்த நடைமுறைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

அந்த வகையில்,

1. வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அனுப்புவதற்கு முன்னர், சுகாதாரத் தரப்பினரதும் பாதுகாப்புத் தரப்பினரதும் பொது இணக்கப்பாட்டின் கீழ், முறையான சுகாதார வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட வேண்டும்.

2. அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பின்னர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டாலும், அது வெற்றியளிக்காது என்றும் அதனால், பிரதேச ரீதியில் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இவர்கள் பயணம் செய்யும் போது, ஒருவருக்கொருவர் வைரஸ் தொற்றாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்தல்

ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றினால், ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியுமென்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தில் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .