2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காலத்தில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக நிதியியல் ரீதியான பல்வேறு சலுகை களைத் தனிநபர்க ளுக்கும்   நிறுவனங் களுக்கும் வழங்கி வருகிறது. மறுபுறம், அந்தச் சலுகைகள், தகுதியான வர்களைப் போய் சேருகின்றதா என்கிற விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன.   

இதற்கு நடுவே, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், நிதி ரீதியான சிக்கல்களிலும், நுண்கடன் ரீதியான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. 

எனவே, இந்தக் காலப்பகுதியில் கடன் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், கடனொன்றைப் பெற்றுக்கொண்டு, அதை மீளச்செலுத்துவதில் பிரச்சினை இருப்பவர்களென, அனைவருமே இந்தக் கடன் பொறிமுறை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இலங்கையரான நாம், கடன்தரப்படுத்தல் தொடர்பில் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாக, எமக்கு ஏற்படுகின்ற நிதியிழப்புகள், சலுகை இழப்புகள் என்பவை தொடர்பில், அறியாமலிருப்பதே, இதற்கான முக்கிய காரணமாகும். 

தனிநபர் கடன்தரப்படுத்தலானது CRIB Report எனப்படும் கடன்தரப்படுத்தல் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு நிதிநிறுவனங்கள், வங்கிகள், இதர பல நிறுவனங்களால், தனிநபருக்கு வழங்கப்படும் நிதி உட்பட, பல்வேறு சலுகைகளைத் தீர்மானிப்பதாக அமையும்.

மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, உயரிய வட்டிவீதத்தை விதிப்பது மட்டுமின்றி, கடனை மீளச்சேகரித்துக் கொள்வதற்கான மேலதிக வழிமுறைகளையும் வங்கி, நிதிநிறுவனங்கள் கையாளத் தவறுவதில்லை. 

குறிப்பாக, மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கக் கூடியவரால், வங்கியில் பெற்றுக்கொள்ளும் கடனை மீளச்செலுத்துவதில் நெருக்கடிநிலை காணப்படும். இந்தநிலையில், அவரால் கடனை மீளச்செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகின்றபோது, நிதி நிறுவனங்கள் தனது கடன் தொகையை, எவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளுவதென்றே சிந்திக்கும். 

இதற்காக, பெரும்பாலும் கடன்பெறுமதிக்கு ஏற்றவகையில், அசையும், அசையாச் சொத்துகளை உத்தரவாதமாகப் பெற்றுக்கொள்ளும். இதைவிடவும், வேறு சட்டரீதியற்ற முறைகளை நிதிநிறுவனங்கள் கையாள்வதையும் இதுதொடர்பில், ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவுகளை வழங்கியிருந்ததையும் கூடக் கேள்விப்பட்டிருப்போம். எனவே, கடன் பெறுகின்றபோது இருக்கின்ற அவதானமானது, கடனை மீளச் செலுத்துவதிலும் இருக்க வேண்டியது அவசியமானது.   

வட்டிவீதங்கள் குறைவாக இருக்க வேண்டுமா?

வங்கியில் சிறந்த கடன்தரப்படுத்தல் அறிக்கையைக் கொண்டிருக்குமொருவரும், மோசமான கடன்தரப்படுத்தல் அறிக்கையைக் கொண்டிருக்கும் ஒருவரும் புதிய கடனொன்றைப் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது, இருவருக்குமே வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதத்தில் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். குறிப்பாக, சிறந்த கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்குக் குறைவான வட்டிவீதத்தையும் மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்கு அதிக வட்டிவீதத்தையும் வங்கி நிர்ணயம் செய்யும்.

இதற்குப் பிரதான காரணம், மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவர்கள், வங்கிக்கடனை மீள்செலுத்தாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள், கடந்தகாலச் செயற்பாடுகளின் பிரகாரம் இருப்பதால், அந்த இடர்நேர்வை வங்கிகள், வாடிக்கையாளர்மீது சுமத்துவதுடன், அந்த இடர்நேர்வை ஏற்கும் வங்கிகள், அதற்கு மேலதிகமான வட்டிவீதத்தையும் அறவிட முடிவு செய்கின்றன. 

இதனால், கடனுக்கான வட்டிவீதங்களைச் சந்தையில் வங்கிகள் குறைக்கின்றபோதும், அந்த வட்டிவீதங்களில் பலனைப் பலரால் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. 

கொரோனா வைரஸ் காலத்திலும், நிதியியல் தேவை இருக்கக்கூடிய பல நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கான கடன், நிதி நிறுவனங்களில் கிடைக்கப்பெறவில்லை என்கிற விமர்சனத்தைக் கேட்டிருப்பீர்கள். அப்போதெல்லாம், அவர்களது கடன் தரப்படுத்தல் எப்படியானதாக இருக்கிறது என்பதை, அறிந்துகொண்டு ஒரு முடிவுக்கு வருவதே சரியானது.

நிதியியல் வசதிகள் முற்றாக நிராகரிக்கப்படவும் கூடும் 

உங்கள் கடந்தகால நிதியியல் செயற்பாடுகள் மிகமோசமாகவுள்ள நிலையில், நீங்கள் போதிய அசையும், அசையாச் சொத்துகளையும் உத்தரவாதத்தையும் வழங்க முன்வருகின்ற சந்தர்ப்பத்திலும் கூட, நிதி நிறுவனங்கள் கடன்,  கடனட்டை போன்ற சலுகைகளை நிராகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

இதற்குப் பிரதான காரணம், உங்களால் பெறப்படுகின்ற கடனைச் சரியான முறையில் மீளச்செலுத்தும் உத்தரவாதமின்மையும் உங்களுக்காக வங்கி செலவிடும் செலவுகள், நேரம் ஆகியவை, அவர்களுக்கான சந்தர்ப்பச் செலவாக உள்ளமையுமே ஆகும்.

உங்களது மோசமான கடன்தரப்படுத்தல், உங்களை மாத்திரம் பாதிப்பதுடன் நின்றுவிடாது, சிறந்த கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கக்கூடிய உங்களது, துணையின் நிதியியல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடும். 

குறிப்பாக, உங்களால் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் விண்ணப்பப்படிவம்’ (Know Your Customer - KYC Form) மூலமாக, உங்களது துணையின் தகவல்களும் உங்களது தகவல்களும் இணைக்கப்பட்டு, மத்திய வங்கியின் ஒன்றிணைந்த தகவல் மய்யத்தில் தொடர்புபடுத்தி சேமிக்கப்பட்டிருக்கும். 

எனவே, உங்களது துணை, கடனைப் பெற்றுக்கொள்ள நிதிநிறுவனமொன்றை நாடுகின்றபோது, உங்களது தகவல்களுடன் அவர் தொடர்புபட்டிருப்பின், உங்களது மோசமான கடன்தரப்படுத்தல் செயற்பாடுகளின் விளைவாக, அவரது நிதியியல் தேவைகளும் பாதிக்கப்படும்.

அதுபோல, நீங்கள் கடனையோ, நிதியியல் பொறுப்புகளையோ பொருத்தமான முறையில் நிறைவேற்றாதவிடத்து, அந்தச் சுமையும் உங்களுக்கு உத்தரவாதம் வழங்கியவர்களைப் பாதிப்பதுடன், அவர்களுடனான உங்கள் உறவிலும் விரிசல்கள் ஏற்படக் காரணமாக அமைந்துவிடும்.

ஒருவேளை வங்கியுடன் உங்களுக்குச் சுமூகமான உறவோ, கடந்த காலங்களில் மேற்கூறிய வகையிலான கொடுக்கல்வாங்கல் செயற்பாடுகளோ இருப்பின், இந்தப் பேரிடர் காலத்தில், நிதியியல் நிறுவனங்களை நீங்கள் நாடிச் செல்வதில் அர்த்தமேயில்லை. 

காரணம், இந்தச் சூழ்நிலையில் வங்கிகள் மிக அவதானமாகவும் பல்வேறு பாதுகாப்பான நிதியியல் கொள்கைகளுக்கு அமைவாகவுமே, நிதியியல் வசதிகளை வழங்கி வருகின்றன. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், உங்களுக்கு நிதியியல் வசதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும். 

கடனுக்கான மூன்றாம் தரப்பின் உத்தரவாதம் கட்டாயமாக்கப்படுதல்

மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்குமொருவர், புதிய கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, குறித்த கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான அசையும், அசையாச் சொத்துகளை உத்தரவாதமாக வழங்கமுடியாதவிடத்தும் வழங்குகின்ற அசையும், அசையாச் சொத்துகள் உத்தரவாதப் பெறுமதிக்குப் போதுமானதாக இல்லாதபோது, நிதி நிறுவனங்கள், குறித்த கடனை அந்நபர் செலுத்த முடியாதவிடத்து, அதைப் பொறுப்பேற்க மூன்றாம் தரப்பினரில் குறைந்தது, இருவரை உத்தரவாதிகளாகக் கோரும். இதற்குப் பிரதான காரணம், கடனைக் கோருகின்ற நபரின் கடன் தரப்படுத்தல், கடன் மீள்செலுத்தும் இயலுமை ஆகியவை போதுமானதாக இல்லாமையே ஆகும்.

எனவே, நீங்கள் உங்களை அறியாமல் செய்கின்ற நிதியியல் தவறுகளானவை உங்களையும் உங்களுடைய எதிர்காலத்தையும் உங்களைச் சார்ந்துள்ளவர்களின் எதிர்காலத்தையும் நிச்சயமாகப் பாதிக்கச் செய்வதாக அமையும். 

எனவே, உங்கள் நிதியியல் ரீதியான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குவதுடன், அதன்மூலமாக உங்களது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதையும் உங்களைச் சார்ந்தோர் பாதிப்படையாத வண்ணமிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம், சாதாரண நாள்களிலேயே வங்கிகளாலும் நிதிநிறுவனங்களாலும் பின்பற்றப்படும் நிதியியல் வழிமுறைகளாக இருக்கின்றன. அதிலும், இந்தக் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் இவை இன்னமும் இறுக்கமாகப் பின்பற்றப்படும். 

இதனால், இலங்கை மத்திய வங்கியில் உரிமத்துவம் பெற்ற நிதிநிறுவனங்களில், உங்களுக்கான நிதியியல் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் அதீத சிரமங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். 

இதனால், நிதியியல் தேவைகளை, மிக இலகுவாகப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள், அதிக வட்டிக்கு நிதியைத் தருகின்ற நிறுவனங்கள், உத்தரவாதம் அளிக்கப்படாத அடகு நிறுவனங்கள் ஆகியவற்றின் மோசடியில் சிக்கி, உங்கள் எதிர்காலத்தை இழந்து விடாதீர்கள். 

இதனால், உங்களுடைய எதிர்காலம் மட்டுமல்ல, உங்களை நம்பியிருப்பவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாவதற்கான வாய்ப்புகள் உண்டு.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .