2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் மூன்று மாதங்களுக்குச் சம்பள குறைப்புக்கு அனுமதி

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் மூன்று மாதங்களுக்கு, ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் அல்லது ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளமாக ரூ. 14,500 வழங்குவதற்கு தொழில் அமைச்சு அனுமதியளித்துள்ளது.  

மே மாதத்தின் முற்பகுதியில் இலங்கைத் தொழில் வழங்குநர் சம்மேளனம், தொழிற்சங்கங்கள்,  தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் இந்தச் சம்பளக் குறைப்பு தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.  

சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடர் நிறைந்த காலப்பகுதியில், எமது தொழிலாளர்களின் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், அவர்களுக்கு ஏதேனும் வகையில் வருமானம் ஒன்று கிடைப்பதை உறுதி செய்வது இலக்காகும்.  

இதன் பிரகாரம், ஓகஸ்ட் மாதம் வரை இந்த உடன்படிக்கை அமலில் இருக்கும் எனவும், மாதாந்த அடிப்படையில் இந்த உடன்படிக்கை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொவிட்-19 தொற்றுத் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, நிறுவனங்களுக்குத் தமது ஊழியர்களை முழுமையாகப் பணிக்குக் கொண்டு வர முடியாமை காரணமாக, பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணி ஒன்றையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கிடையே கொடுப்பனவு வித்தியாசமொன்றைப் பேணுவதை இந்த உடன்படிக்கை கொண்டுள்ளது.  

கொவிட்-19 காரணமாக, பணியிலிருந்து ஊழியர்கள் நீக்கம் செய்யப்படுகின்றமை தொடர்பாக, தொழில் சங்கங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து, இவ்வாறு எழும் முரண்பாடுகளுக்குத் தீர்வு கண்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்பார்வைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில், உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.  

இவ்வாறிருக்க, தமது நிறைவேற்றுச் செயலணியினரைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், தற்போதைய இந்த இடர் நிறைந்த சூழலிலிருந்து மீட்சியடைவதற்குத் தமக்கு இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என MAS ஹோல்டிங்ஸ், தமது ஊழியர்களுக்குக் கடந்த வாரம் அறிவித்திருந்தது.  

அடுத்த மூன்று மாதங்களில், நிறைவேற்றுச் செயலணிக்கு, பிரிந்து செல்லல் தொடர்பான திட்டமொன்று அமல்படுத்தப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது.  ‘தற்போது, எமது வியாபாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இந்தக் கேள்விகளை நிறைவேற்றுவதற்காக எம்மிடம் காணப்படும் வளங்களை மீள்கட்டமைத்து, ஒழுங்கமைப்புச் செய்வதைத் தவிர, மாற்று வழி எதுவுமில்லை. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராட்சியம் போன்ற பிரதான நாடுகளிலிருந்து, அடுத்த ஆண்டுக்காக எவ்விதமான ஓடர்களும் இதுவரையில் கிடைக்கவில்லை’ என, MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

ஏற்கெனவே, இந்த ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்ட கொள்ளளவுகளின் எண்ணிக்கையில், 30-35 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் தொழிற்சாலைகளைக் கொண்ட ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் பாரிய ஆடை உற்பத்தி நிறுவனமொன்றும், சுமார் ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் வகையில், திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.  

பெருமளவான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள முன்வந்துள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்கா போன்ற பிரதான சந்தைகளின் அடுத்த நகர்வைப் பொறுத்து, அவற்றின் இறுதியான தீர்மானம் அமைந்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .