2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் வரட்சி: 83,000 பேர் பாதிப்பு

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராச கிருஸ்ணகுமார்

தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்த 83,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று  (22) இடம்பெற்ற, வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விசேட கூட்டத்தின் போதே,  இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து  மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,

“கரைச்சி பிரதேச செயலகத்தில் 42 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 9,327 குடும்பங்களைச் சேர்ந்த 32,632 பேரும், கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த  16 கிராம அலுவலர் பிரிவுகளில்  5,767 குடும்பங்களைச் சேர்ந்த 20,181  பேரும், பூநகரி பிரதேச செயலகத்தில்  19 கிராம அலுவலர் பிரிவில்  5,354 குடும்பங்களைச் சேர்ந்த 18,654  பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 18 கிராம அலுவலர் பிரிவுகளில்  3,464 குடும்பங்களைச் சேர்ந்த  11,624  பேரும், வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இதில், 32 கிராமங்களிலுள்ள 3,914 குடும்பங்களுக்கு, பிரதேச  சபைகள் மற்றும்  பிரதேச  செயலகங்களினால்  குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் கால்நடைகள் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்படவில்லை எனவும், ஆனால் இந்த வரட்சியான நிலை தொடர்ந்தும் நீடித்தால், கால்நடைகள் மற்றும் வான்பயிர்களும் பாதிப்படையும் நிலைமை ஏற்படுவதோடு, மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்குக்  கூட நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள நன்னீர் மீன்பிடியாளர்களில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள், பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், குறைந்தது 6 மாதகாலத்துக்குகு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .