2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழரசுக் கட்சியில் இணைய நடராஜா முயற்சி

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி. நடராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட கோட்டக் கல்வி அதிகாரியான எம்.பி. நடராஜா, குறைந்தளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், சுழற்சி முறையில் தமக்குக் கிடைத்த ஓராண்டு கால ஆசனத்தை எம்.பி. நடராஜாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் வழங்கியிருந்தது.

எம்.பி. நடராஜா, மலையக சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தியதன் அடிப்படையில் ஈ.பி.ஆர்.எல்.எப் அவருக்கு முன்னுரிமையளித்திருந்தது. தற்போது பதவிக்காலம் முடிவடைந்து மீண்டும் கோட்டக் கல்வி அதிகாரியாக  எம்.பி. நடராஜா பணியாற்றி வரும் நிலையில், தமக்கும் தமது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள தமிழரசுக் கட்சியில் இடம் தரவேண்டும் எனக் கோரி தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன தமது மலையக மக்களின் வாக்கைப் பெறுவதற்காகவே தம்மை பயன்படுத்துவதாக தமிழரசுக் கட்சியிடம் எம்.பி. நடராஜா குற்றம் சாட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக எம்.பி.நடராஜாவிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

“வடக்கு - கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி எனப் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும், அவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதன் காரணமாக, வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும், பல்வேறு தரப்புக்களுடனும் நாம் பேசி வருகின்றோம்.

அதனடிப்படையிலேயே, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஐயாவுடனும் நாம் பேசியிருந்தோம். அடுத்து வரும் நாட்களில் வேறு சில தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளோம். வடக்கு - கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் நலன்சார்ந்தே பேசி வருகின்றோம்.

சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது போன்று நாம் எந்தவொரு கட்சியுடன் இணைந்தோ அல்லது எந்தவொரு கட்சியில் இருந்து பிரிந்தோ செயற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .