2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘விக்னேஸ்வரன் வன்னிப் பகுதியைப் புறந்தள்ளுகிறார்’

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகத் குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன், வன்னி தொகுதியை புறந்தள்வதற்கு, கொழும்பில் இருந்து வேட்பாளர் ஒருவரை அழைத்து வந்து, வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாகவும் சாடினார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில், நேற்று (16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வன்னி தேர்தல் தொகுதியில், வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு தனக்கு மத்திய குழுவால் வழங்கப்பட்டதாகவும் அருந்தவபாலனும் அதற்கு உடன்பட்டிருந்தாரெனவம் கூறினார்.

அதன் அடிப்படையில், பலருடன் கதைத்தபோதும், யாரும் கட்சியில் இணைந்து போட்டியிட முன்வரவில்லையெனத் தெரிவித்த அவர், எனினும், தான் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சிறந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

அதன் பிரகாரம், வவுனியா மாவட்டத்தில், சந்திரகுமார் கண்ணன் என்பவரை வேட்பாளராகத் தெரிவு செய்தததாகத் தெரிவித்த அவர், கண்ணன் என்பவரை தெருவில் தான் விட்டுவிட்டதாக மற்றவர் கூறும் அளவுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் நடந்து விட்டனரெனவும் சாடினார்.

எனினும், தான் விக்னேஸ்வரனை மதிப்பதாகத் தெரிவித்த அவர், எனினும் அவருடன் கூட இருப்பவர்கள் சிலர், தாங்கள் தான் விக்னேஸ்வரனின் கட்சிக்கு அடுத்த தலைவர் என்ற நிலையில் கனவு கண்டு செயற்பட்டு வருகின்றனரெனவும் குற்றஞ்சாட்டினார்.

அக்கட்சியில் மத்தியகுழு என்பது போலியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் தான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லையெனவும் இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் விலகிக்கொள்வதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணம் போல, வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால், அதில் தான் இணைந்து பணயிப்பதாகவும், அவர் கூறினார்.

வன்னியில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய நிலையில் உள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ள போதிலும், கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வைத்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியானது, இன்று ஓர் ஆசனத்தைக்கூட பெற முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாகவும், சிறிதரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .