2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டி

Editorial   / 2018 ஜூலை 14 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்து இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகளும் தெரிவாகிவிட்டன. பிரான்ஸ், குரேஷியா அணிகளுக்கிடையேயே இறுதிப் போட்டி. ஒரு முன்னாள் சம்பியனும் முதற் தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணிக்குமிடையிலான இறுதிப் போட்டியாக இப்போட்டி அமையவுள்ளது. இவ்விரண்டு அணிகளுக்குமான இறுதிப் போட்டி பற்றி பார்வையிட முதல் அரையிறுதிப் போட்டிகளில் நடைபெற்றவற்றை மீட்டுப் பார்க்கலாம்.

பிரான்ஸ், பெல்ஜியமணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டி கடந்த பத்தாம் திகதி நடைபெற்றது. இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி சமபல போட்டியாகவே நடைபெற்றது. போட்டியும் அதே விறுவிறுவிறுப்புடன் நடைபெற்றது. பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்றது போல பந்தை கூடுதலாக வைத்திருந்த அணிகள் வெற்றி பெற்றது குறைவு என்பது இப்போட்டியிலும் நடைபெற்றது. இப்போட்டியை பொறுத்த மட்டில் பிரான்ஸ் அணி பக்கமாக சிறிதளவு அதிஷ்டம் இருந்தது எனக் கூறலாம். பெல்ஜியமணி தமக்கு கிடைத்த வாய்ப்புகள் பலவற்றை வீணாக்கியது. எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த பெல்ஜியமணி அரையிறுதிப் போட்டியென்ற பதட்டத்துடன் விளையாடியமை தெளிவாக தென்பட்டது. போட்டி ஆரம்பித்தது முதல் போட்டி கடுமையாகவே இருந்தது. இரண்டு அணிகளும் கோல்களுக்காக போராடின. இறுதியில் பிரான்ஸ் அணி 51ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் ஒன்று மட்டுமே போட்டியின் ஒரே கோலாக மாறியது.

ஆறாவது தடவையாக அரையிறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் அணி மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 1958ஆம் ஆண்டு முதற் தடவையாக அரையிறுதிப் போட்டியில் விளையாடியவர்கள் தோல்வியடைந்தார்கள். 40 வருடஙகளின் பின்னரே அவர்களால் அரையிறுதிப் போட்டியில் வெல்ல முடிந்தது. 1998 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் முதற் தடவையாக சம்பியன் பட்டத்தையும் வென்றார்கள்.   அதற்கிடையில் 82, 86ஆம் ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தார்கள். 2006ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இருப்பினும் இத்தாலி அணியுடன் தோல்வியடைந்தார்கள்.

பெல்ஜியமணிக்கு இது இரண்டாவது அரையிறுதிப் போட்டி. 32 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பை அவர்களால் பாவிக்க முடியாமல் போனது. முதல் உலகக் கிண்ணத் தொடரிலிருத்து விளையாடி வரும் பெல்ஜியம் அணி ஏன் முன்னேற முடியவில்லை என்பது சந்தேகமான விடயமே. ஆனால் இறுதி இரண்டு உலகக் கிண்ண தொடர்களில் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம் நிச்சசயம் அவர்களை அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் இன்னமும் முன்னேறவும் பலமான அணியாக விளையாடவும் முடியும் என்பதை காட்டியுள்ளது. அடுத்தடுத்த இரண்டு உலகக்கிண்ண தொடர்களில் இவர்கள் முன்னேற்றாம் கண்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

பெல்ஜியம் அணியை பொறுத்த மட்டில் பிரான்ஸ் அணியிலும் பார்க்க நல்ல அணியாகவே தென்பட்டனர். விலகல் போட்டிகள் என வரும்போது விடுகின்ற ஒவ்வொரு சிறு பிழையும் போட்டியில் தோல்வியை ஏற்படுத்திவிடும். அதேபோன்ற நிலைதான் இப்போட்டியிலும். கோலை விட்டது பரவாயில்லை. கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டமை முக்கியமானது. பிரான்ஸ் அணிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களும் தவறவிட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த கோல் இறுதிப் போட்டியில் அவர்களை கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. பெல்ஜியம் அணி மூன்றாமிடத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து, குரேஷியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. மிகுந்த விறுவிறுப்பான போட்டியிது. குரேஷியா அணி வேகமாக தமது விளையாட்டை ஆரம்பித்து நடுவே கொஞ்சம் வேகத்தை குறைத்து பின்னர் வேகமாக முடிவு செய்வார்கள். அந்தப் பாணியை இப்போட்டியில் பார்க்க முடிந்தது. போட்டி ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் தமக்கு கிடைத்த பிறீ கிக்கை கோலாக மாற்றிய இங்கிலாந்து முன்னிலை பெற்றது. மிக சிறப்பாக இங்கிலாந்து அணி விளையாடியது. ஆனாலும் பந்துக்கட்டுப்பாடு குரேஷியா அணியின் பக்கமாகவே அதிகமாக காணப்பட்டது. முதற்பாதி நிறைவடையும் போது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என்பது போன்ற நிலை காணப்பட்டது.

குரேஷிய அணியின் விளையாட்டின் நிலைமை அந்தளவுக்கு குறைவடைந்து காணப்பட்டது. போட்டி மீண்டும் ஆரம்பித்ததும் கொஞ்சம் வேகமாகிய போட்டி, இங்கிலாந்து அணிக்கான வாய்ப்புகளையும் வழங்கியது. அனால் ஆரம்பம் முதல் குரேஷிய அணிக்கான வாய்ப்புகளும் தவறவிடப்பட்டன. இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டிய குரேஷியா அணி 68ஆவது நிமிடத்தில் கோல் பெற்று போட்டியை சமன் செய்தது. அதன்பின்னரே போட்டி இன்னமும் சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் தவறவிட்ட கோல்கள் இந்த சூடு பிடிப்புக்கு காரணமாக அமைந்தது. சமநிலையில் போட்டி நிறைவடைய மேலதிக நேரப்பகுதியின் முதற் பாதியிலும் சமநிலை காணப்பட்டது. இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் கோல் பெற்றதன் மூலம் குரேஷியா அணி முன்னிலை பெற்றது. போட்டியும் அவ்வாறே நிறைவடைந்தது. குரேஷியா அணி முதற் தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

குரேஷியா அணியின் வளர்ச்சி மிகவும் சிறப்பானது. 1998 ஆம் ஆண்டு முதற் தடவையாக உலகக் கிண்ணத் தொடரில் கால்பதித்தவர்கள் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டார்கள். அதன் பின்னர் முதல் சுற்றை தாண்டியதில்லை. அதிலும் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறவில்லை. இவ்வாறான நிலையில் உள்ள அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அவர்களை உலகம் நிச்சயம் ஆச்சரியமாக பார்க்கும். இவர்கள் வெற்றி பெற்றுக் கொண்ட அணிகளும் இலகுவான அணிகள் இல்லை என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. மூன்று விலகல் போட்டிகளிலும் மேலதிக நேரத்துக்கு சென்று வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்களின் போராடும் தன்மை இதன் மூலம் புலப்படுகிறது. ஒரு அணி 30 ஆண்டுகளில் இந்தளவு சாதிக்கிறது என்றால் நிச்சயம் எதிர்காலத்தில் இவர்கள் இன்னமும் முன்னோக்கி வருவார்கள் என நம்பலாம். யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து பிரிந்த நாடு என்றாலும் கூட யூகோஸ்லாவியா இறுதிப் போட்டிக்கு ஒரு தடவைதானும் தகுதி பெறவில்லை. அதனையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து அணி 1990ஆம் ஆண்டின் பின்னர் அரை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது. இது அவர்களுக்கு மூன்றாவது அரையிறுதிப் போட்டி. 1966 ஆம் ஆண்டு விளையாடிய அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுக் கொண்டார்கள். 90ஆம் ஆண்டு அப்போதைய சம்பியனான மேற்கு ஜேர்மனி அணியிடம் தோல்வியடைந்தார்கள். இப்போது குரேஷிய அணியிடம் தோல்வியடைந்துள்ளார்கள். மீண்டும் உலக சம்பியனிடம்தான் தோல்வியடைந்தார்கள் என்ற நிலை வருமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மூன்றாமிடத்துக்கான போட்டி பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளுமே மூன்றாமிடத்தை பெறாத அணிகள். 1990ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி இத்தாலி அணியிடம் தோல்வியடைந்து நான்காமிடத்தை பெற்றுக் கொண்டது. பெல்ஜியமணி இரண்டாவது தடவையாக மூன்றாமிடத்துக்கான போட்டியில் மோதவுள்ளது. 1986 ஆம் ஆண்டு அப்போதைய சம்பியனான ஆர்ஜென்டீனா அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பெல்ஜியம் அணி பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டு அணிகளும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மீண்டும் மோதவுள்ளன. ஒரே குழுவை சேர்ந்த அணிகள் இரண்டும் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து மீண்டும் மோதவுள்ளன. முதற் போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் உலகக்கிண்ண தொடர்களில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். வெற்றி, தோல்வி,சமநிலை முடிவு ஒவ்வொன்றாக காணப்படுகின்றன. எனவே மூன்றாமிடத்துக்கான இப்போட்டியில் மீண்டும் பெல்ஜியம் அணி வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து அணி பழி தீர்க்குமா? எந்த அணி வென்றாலும் முதற் தடவையாக மூன்றாமிடத்தை தமதாக்கி கொள்வார்கள் என்பது சிறப்பானது. 

இறுதிப் போட்டி நிச்சயம் மிகப்பெரியளவில் விறுவிறுப்பை தரப்போகிறது. குரேஷியா அணி விளையாடும் விதம் பிரான்ஸ் அணியிலும் பார்க்க இவர்கள் சிறப்பாகத்தான் விளையாடுகிறார்களோ என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்கள் தோல்வியின்றி தொடரை நிறைவு செய்ய வேண்டும். பிரான்ஸ் அணி முதல் சுற்றில் ஒரு சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் அணி அனைத்துப் போட்டிகளிலும் மேலதிக நேரமின்றி போட்டிகளை நிறைவு செய்துள்ளது. விலகல் சுற்றுகளின் மூன்று போட்டிகளிலும் குரேஷியா அணி மேலதிக நேரப்பகுதிக்குள் சென்றே போட்டிகளை நிறைவு செய்துள்ளது. அவற்றுள் இரண்டு போட்டிகள் பெனால்டி வரை சென்றுள்ளன. எனவே இந்தப் ஒப்பீட்டில் பிரான்ஸ் அணி பலமாக காணப்படுகிறது.

இரண்டு அணிகளும் உலகக்கிண்ண தொடரில் ஒரு போட்டியில் மோதியுள்ளன. அது 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி. பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. குரேஷிய அணி அதற்கு பதிலடி வழங்குமா இம்முறை? பந்தயக்காரர்கள் பிரான்ஸ் அணி உலககிண்ணத்தை வெல்வதற்கான அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளார்கள்.

குரேஷியா அணிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட சரி பாதியாகவே வழங்கியுள்ளார்கள். எனவே பிரான்ஸ் அணி வெல்லுமென்ற எதிர்பார்ப்பே சர்வதேச அரங்கில் அதிகம் காணபப்டுகிறது. இம்முறை எதிர்பார்ப்புகள் எல்லாமே தவிடு பொடியாகியுள்ள நிலையில் இந்த எதிர்பார்ப்பைக் கூட நம்புவது கடினமே. தரப்படுத்தல்களின் படி பிரான்ஸ் அணி ஏழாமிடத்திலும், குரேஷியா அணி இருபதாமிடத்திலும் காணப்படுகின்றன. எனவே இரண்டுக்குமான வித்தியாசம் என்பது முக்கியமென்றாலும் இவர்களை முந்திய அணிகளை தாண்டி இவர்கள் இறுதிப் போட்டிக்குள் வந்துள்ளார்கள். உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டு அணிகள் இவர்கள் பலமானவர்கள். வெற்றிபெறுவார்கள் என நம்புவது எவ்வாறு சாத்தியம்? இரண்டு அணிகளுமே சமனாகவே காணப்படுகின்றன. போட்டியின் முடிவை நாம் கணிப்பது எதிர்வுகூறுவது கால்பந்தில் சாத்தியமற்ற விடயம். எனவே இறுதிப் போட்டியை நாளை பார்த்து ரசித்து, யார் வென்றார்கள் என்பதனை  தெரிந்து கொள்வதே சிறந்தது. 

மூன்றாமிடத்துக்கான போட்டி

பெல்ஜியம் எதிர் இங்கிலாந்து - 14 ஜூலை 2018 (இன்று) இரவு 7.30

இறுதிப் போட்டி

பிரான்ஸ் எதிர் குரேஷியா - 15 ஜூலை 2018 (நாளை) இரவு 8.30


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .