2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதி மதுரோவுக்கெதிராக 200,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

Shanmugan Murugavel   / 2017 மே 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 50ஆவது நாளான நேற்று  (20), 200,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,  வீதிகளில் இறங்கியிருந்தனர்.   

இந்நிலையில், முன்னையை ஆர்ப்பாட்டங்களைப் போலவே, தலைநகர் கராகஸில், பொலிஸார், நேற்று முன்தினமும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.   
இந்த வீதி ஆர்ப்பாட்டங்களில், இதுவரையில் 47 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆர்ப்பாட்டங்களில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், 2,200 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இரணுவத் தீர்ப்பாயங்களினால், 161 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   

கராகஸில், 160,00 பேரளவானோர் பேரணியாகச் சென்று, நகரின் மத்தியில் இருக்கும் உள்விவகார அமைச்சை அடைய முயன்றதாக, எதிரணிக் கூட்டணியான, ஜனநாயக ஒன்றிணைப்பு வட்ட மேசையின் பேச்சாளரான எடின்ஸன் பெரெர், ஆரம்பகட்ட மதிப்பீட்டை மேற்கோள்காட்டித் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதற்காக, அரசியலமைப்புச் சபையொன்றைத் தேர்ந்தெடுக்கும், ஜனாதிபதி மதுரோவின் சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, 2,000 பேரளவான, அரசாங்கத்துக்கு ஆதரவான பணியாளர்கள், பேரணியொன்றை நடாத்தியிருந்தனர்.   

டஷிரா மாநிலத்திலுள்ள சான் கிறிஸ்டோபலில், 40,000க்கு மேற்பட்டோர் வீதிகளில் இறங்கியிருந்ததாக, மதிப்பிடப்பட்டிருந்தது. வீதி வன்முறையையும் கொள்ளையையும் தடுப்பதற்காக, 2,600 படைவீரர்களை, டஷிராவுக்கு, ஜனாதிபதி மதுரோ அனுப்பியிருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .