2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடரை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2017 மே 30 , பி.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில், இங்கிலாந்தை குறைந்த ஓட்டங்களுக்குள் சுருட்டி, தென்னாபிரிக்கா அபார வெற்றிபோதும், முதலிரண்டு போட்டிகளையும் வென்று, அசைக்க முடியாத முன்னிலையை ஏற்கெனவே பெற்ற இங்கிலாந்து, 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.  

லோர்ட்ஸில், நேற்று (29) இடம்பெற்ற மேற்கூறப்பட்ட போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி டி வில்லியர்ஸ், இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.  

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து, கஜிஸ்கோ றபடா, வெய்ன் பார்னல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது, ஐந்து ஓவர்களில், 20 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருநாள் சர்வதேசப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில், முதல் ஐந்து ஓவர்களில், ஆறு விக்கெட்டுகளை ஓர்  அணி இழக்கும் முதலாவதாக சந்தர்ப்பமாக, இது அமைந்தது.  

பின்னர், ஏழாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் வில்லி ஆகியோரின் இணைப்பாட்டம் காரணமாகவும், இங்கிலாந்து சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட டொபி றோலண்ட்-ஜோன்ஸின் இறுதி நேர ஓட்டங்கள் காரணமாகவும், 31.1 ஒவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் என்ற, ஓரளவு கெளரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.  

துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 51 (67), டொபி றோலண்ட் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 (37), டேவிட் வில்லி 26 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸ்கோ றபடா 4, கேஷவ் மஹராஜ், வெய்ன் பார்னல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 154 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 28.5 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்து, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், ஹஷிம் அம்லா 55 (54), குயின்டன் டி கொக் 34 (39), ஜே.பி டுமினி ஆட்டமிழக்காமல் 28 (43), ஏ.பி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 27 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் போல் 2, டொபி றோலண்ட் ஜோன்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  இப்போட்டியில் 23 ஓட்டங்களைப் பெற்றபோது, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 7,000 ஓட்டங்களைப் பெற்ற ஹஷிம் அம்லா, இனிங்ஸ்களின் அடிப்படையில், 7,000 ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களை வேகமாகக் கடந்தவராக மாறினார். 150ஆவது இனிங்ஸில், 7,000 ஓட்டங்களை அம்லா கடந்த நிலையில், இதற்கு முன்னர், 161ஆவது இனிங்ஸில், 7,000 ஓட்டங்களை, விராத் கோலி கடந்திருந்தார்.  

இப்போட்டியின் நாயகனாக கஜிஸ்கோ றபடா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .