2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொக்குளாயில் போராட்டம்

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும்,  முல்லைத்தீவு - கொக்குளாய் பகுதியில், கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில்  கந்தசாமிமலை தென்னமரவாடி, குருந்தூர்மலை, நீராவியடி, கொக்கிளாய், வெடுக்குநாறி, கன்னியா வெந்நீரூற்று, மயிலத்தமடு போன்ற தமிழர் பிரதேசங்கள் - சிங்கள ஆக்கிரமிப்புக்குட்பட்டு, தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களும், பாரம்பரிய அடையாளங்களும் சின்னங்களும் திட்டமிட்டு அடாத்தாக அபகரிக்கப்படுகின்ற விடயங்களையும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிங்கள ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவதையும் பார்த்தும் சர்வதேசம் பாராமுகமாகவே இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது என்றனர். 

"தையிட்டி விகாரையமைப்பு போன்ற செயற்பாடுகளினூடாக தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மயமாக்கல் திணிக்கப்படுகின்றது.

"சிங்கள பௌத்த பேரினவாத அரசானது, இலங்கையை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடாக பிரகடனப்படுத்தும் நோக்கில், சிங்கள பௌத்தம் அல்லாத மற்ற அனைத்து இனங்களையும் மதங்களையும் அழிக்கும் நோக்கில் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது.

"தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இன்றைய கால சூழலில், தமிழர்களின் சுதந்திரத்தை நசுக்கி எம்மை அடிமைகளாக வைத்திருக்கக்கூடிய சிறிலங்காவின் சுதந்திரதினத்தை தமிழ் மக்களாகிய நாம் புறகணிக்கின்றோம். 

"எனவே, ஶ்ரீ லங்காவின் சுதந்திரதினம் என்பது தமிழர்வரலாற்றில் கரிநாளாகவே உள்ளது.

"இந்த உண்மைகளை சர்வதேசம் புரிந்துகொண்டு, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சர்வதேசம் துணைநிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்" என, போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .