2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அதிகரிக்கும் சிசு மரணங்கள்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த 6 மாதத்தினுள், பெண் நோயியல் மகப்பேற்று வைத்தியப் பிரிவில் 10 தாய், சேய் வீண் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். இவற்றில் குழந்தைப் பேற்றிற்கான சிசு மரணங்களே அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக அண்மை காலமாக பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். காரைதீவைச் சேர்ந்த 5 வருடம் குழந்தைப் பாக்கியம் இன்றி இருந்த பெண்மணி ஒருவருக்கு குழந்தைப் பேற்றிற்காக மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உரியவேளையில் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படாமையால், ஆண் குழந்தை உயிரிழந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு சிசேரியன் சிகிச்சை மூலம் ஒரு பெண்மணிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது. இப்பெண்மணி இவ்வைத்தியசாலையில் குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன் பரிசோதிக்கப்பட்டு குழந்தை துடிப்புடன் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டிருந்தது. மீண்டும் காய்ச்சலுடன் பெண்மணி அனுமதிக்கப்பட்டபோது சிசேரியன் ஊடாக குழந்தை பெறப்பட்டபோது குழந்தை உயிரிழந்தது.

எனவே இவ்வீண் மரணங்கள் தொடர்பாக பொதுமக்கள் சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். 10 மரணங்கள் ஏற்பட்டமையை பாதிக்கப்பட்டோர் உறுதிசெய்கின்றனர். உரியவேளைக்கு சிசேரியன் செய்யப்படாமையே பிரதான காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வைத்தியசாலையின் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணராக டொக்டர். மார்க்கண்டு திருக்குமார் கடமையாற்றி வருகின்றார். வைத்தியர்கள் தியாக மனப்பாண்மையுடன் சேவை செய்தாலும் இவ்வாறான சம்பவங்களை பொதுமக்கள் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. இவ்விடயத்தை சுகாதார அமைச்சு கவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு சென்றுள்ளர்.

இவ்விடம் தொடர்பாக கல்முறை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மார்க்கண்டு திருக்குமாரினை 'தமிழ்மிரர்' தொடர்புகொண்டு கேட்டபோது... 'சிசு மரணம் என்பது தவிர்க்க முடியாதது. இலங்கையின் புள்ளிவிபரப்படி சிசு மரண வீதம் 16 ஆக இருக்கின்றது. நான் இந்த வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக பொறுப்பெடுக்க முன்னர் ஒரு மாதத்திற்கு சராசரியாக 80 மகப்பேறுகளே இடம்பெற்றுள்ளன. இப்பொழுது சுமார் 250 இற்கும் மேற்பட்ட பிரசவங்கள் மாதந்தம் இடம்பெறுகின்றன.

மருத்துவர்களின் கவனயீனத்தால் சிசுக்கள் மரணமடைகின்றன என்பதை ஒரு வைத்தியன் என்ற ரீதியில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் உயிர்களை பாதுகாப்பதற்காகத்தான் போராடுவார்களே தவிர அவர்களின் இறப்புக்கு காரணமாக இருக்க மாட்டார்கள். இரண்டு மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் 10 வைத்தியர்களும் செய்யவேண்டிய வேலையை ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரும் 4 வைத்தியர்களையும் வைத்துக்கொண்டு செய்கிறோம். அதேபோல் இவ்வைத்தியசாலையில் போதிய சிசு பராமரிப்பு சிகிச்சைப் பிரிவு வசதி இல்லை. இவ்வசதி தேவைப்பட்டால் அண்டைய வைத்தியசாலையின் தேவையை நாடவேண்டி இருக்கிறது. இது தொடர்பாகவும் நாங்கள் சுகாதார அமைச்சிடம் முறையிட்டிருக்கிறோம்.

ஆகவே இப்படியான பல பிரச்சினைகளின் மத்தியில் இயங்கும் இவ்வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு 250 இற்கு மேற்பட்ட பிரசவங்கள் நிகழ்கையில் ஒருசில சிசுமரணங்கள் நிகழ்வது சாத்தியமானதே. இருப்பினும் இது மருத்துவர்களின் கவனயீனத்தினால் ஏற்பட்டதல்ல என்பதை மேலும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்...' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .