2025 மே 21, புதன்கிழமை

இறக்காமத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க மூன்று தனிநபர் பிரேரணை

Gavitha   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கமாறு கிழக்கு மாகாண சபையிடம் கோரும் மூன்று தனிநபர் பிரேரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) அன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட இறக்காமம் கல்விக் கோட்டத்தில், 12 பாடசாலைகள் அமைந்துள்ளன. இப்பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், இந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்' என்று அவர் இதன்போது கூறினார்.

'இறக்காம பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இவ்வருடம் ஆசிரியக் கல்லூரிகளிலிருந்து  வெளியேறும் இறக்காமம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களை, அந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கே நியமிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும் வெளிமாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களையும், இறக்காமம் பாடசாலைகளுக்கே இடமாற்றம் வழங்கி குறித்த பகுதிக்கான கல்விக்கு தீர்வை வழங்குமாறு, கிழக்கு மாகாண சபை, மத்திய அரசாங்க கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

'இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் தனி நபர் பிரேரணையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இத்தினத்தில் மூன்றாவது தனிநபர் பிரேரணையாக, அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஒன்றை ஸ்தாபித்து கல்வி வலயங்களில் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களை உள்ளீர்ப்பு செய்யுமாறு மத்திய அரசாங்கத்தையும், மத்திய கல்வி அமைச்சையும் கோருவதற்கான நடவடிக்கையும் எடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை அழுத்தம் வழங்க வேண்டும்' என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X